மத்தியப் பிரதேசத்தின் ஷாம்கார்த் நகரில், 16 வயது மாணவியை கத்தி முனையில் மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தராததால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால், நகரம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ஷாம்கார்த் நகரில் 16 வயது பள்ளி மாணவி ஒருவரை மிரட்டி, பாலியல் ரீதியான காணொளியைப் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் அந்நகரில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையால் கோபமடைந்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதானல், ஷாம்கார்த் நகரம் முழுவதும் கடைகள், அடைக்கப்பட்டு, போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கத்தி முனையில் மிரட்டி வீடியோ பதிவு
இந்த சம்பவம் குறித்து காவல்துறை கூறியதாவது:
கடந்த நவம்பர் 6-ஆம் தேதி 12-ம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, ரியான் (Rihan) மற்றும் பாபு (Babu) என்ற இரண்டு பேர் அத்துமீறு உள்ளே நுழைந்துள்ளனர். ரியான் என்பவர் கத்தி முனையில் மாணவியை மிரட்டி, அவரது தாயின் தொலைபேசியில் ஆபாச வீடியோ பதிவுசெய்துள்ளார். பின் அதை தனது கைப்பேசிக்கு மாற்றியுள்ளார்.
இந்தக் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரிடம் இருந்து ரியான் ரூ. 5 லட்சம் கேட்டுள்ளார். பயத்தின் காரணமாக, குடும்பத்தினர் ரூ. 2 லட்சம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
மீதமுள்ள பணத்தைத் தராததால் ரியான் அந்த வீடியோவை வியாழக்கிழமை மாலை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
காவல் நிலையம் முற்றுகை
வீடியோ சமூக ஊடகங்களில் பரவியவுடன், வியாழக்கிழமை இரவே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஷாம்கார்த் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரினர். வெள்ளிக்கிழமை இந்தப் போராட்டம் தீவிரமடைந்து, இந்து அமைப்புகள் இதில் இணைந்ததால், நகரமே ஸ்தம்பித்தது.
பொதுமக்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வந்த நிலையில், காவல்துறை போக்சோ சட்டம் (POCSO Act), உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
குற்றவாளிகளைப் பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டு, 2 குற்றவாளிகளும் 12 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கை
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, குற்றவாளிகள் ரியான் மற்றும் பாபு ஆகியோரின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி துண்டிதுள்ளது.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரும், பொதுமக்கள் கடுமையான தண்டனை கோரி வருவதால், ஷாம்கார்த் நகரில் இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


