விஜய் திவாஸ் அன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் 'பரம் வீர் சக்ரா' என்ற புதிய புகைப்படக் காட்சியகத்தைத் திறந்து வைத்தார். இந்த முயற்சி நாட்டின் மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக அமைந்துள்ளது.

விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் 'பரம் வீர் தீர்க்கா' (Param Vir Dirgha) என்ற புதிய புகைப்படக் காட்சியகத்தைத் திறந்து வைத்தார்.

இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருதான 'பரம் வீர் சக்ரா' பெற்ற 21 வீரர்களின் உருவப்படங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.

முன்னதாக இந்தப் பாதையில் பிரிட்டிஷ் ஆட்சியின் அடையாளமான 'எய்ட்ஸ்-டி-கேம்ப்' (ADCs) அதிகாரிகளின் படங்கள் இருந்தன. தற்போது அந்த இடத்தைப் நாட்டின் எல்லைகளைக் காத்த ராணுவ வீரர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது காலனித்துவ அடையாளங்களில் இருந்து விடுபட்டு, நாட்டின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் போற்றும் முக்கிய மாற்றம் என மத்திய அரசு கருதுகிறது.

பரம் வீர் சக்ரா கண்காட்சியின் சிறப்பு

சுதந்திரத்திற்குப் பிறகு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் வீரக்கதைகளை இந்தப் படங்கள் பறைசாற்றுகின்றன. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரும் பார்வையாளர்கள், நம் நாட்டு மாவீரர்களின் தன்னலமற்ற தியாகத்தைப் பற்றி அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நினைவுகூரும் விஜய் திவாஸ் தினத்தன்று இந்தப் புகைப்படக் கண்காட்சி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பரம் வீர் சக்ரா என்றால் என்ன?

இது போர்க்காலத்தில் எதிரிகளின் முன்னிலையில் மிகச்சிறந்த துணிச்சலையும், தியாகத்தையும் வெளிப்படுத்தும் வீரர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருது ஆகும்.

இதுவரை 21 வீரர்களுக்கு மட்டுமே இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது, இதில் பலர் தங்களது உயிரைத் தியாகம் செய்த பின் இந்த விருதைப் பெற்றவர்கள்.

இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "நமது ஆயுதப் படையினரின் வீரம் மற்றும் தேசபக்தி எப்போதும் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்," என்று தெரிவித்துள்ளார்.