பெங்களூருவில் ஒயிட்ஃபீல்டில் இருந்து எம்.ஜி ரோடுக்கு மெட்ரோ மற்றும் ஸ்கூட்டரில் யார் முதலில் செல்வது என ஒரு பந்தயம் நடந்தது. மெட்ரோவில் சென்றவர் கூட்ட நெரிசலையும் மீறி எளிதில் வென்றாலும், இறுதியில் ஒரு சுவாரஸ்யமான ட்விஸ்ட் காத்திருந்தது.

பெங்களூருவின் டிராபிக் பிரச்சனையை மையமாக வைத்து இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ இப்போது செம வைரலாகி வருகிறது. ஒயிட்ஃபீல்டில் இருந்து எம்.ஜி ரோடு வரை யார் முதலில் செல்வது என்ற இந்த சவாலில் பல சுவாரசியமான விஷயங்கள் அரங்கேறின.

இந்தப் பந்தையத்தில் ஒரு நபர் மெட்ரோவிலும், அவரது நண்பர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் கிளம்பினர்.

மெட்ரோவில் கூட்ட நெரிசல்

மெட்ரோவில் பயணம் செய்தவருக்கு ஒரு பெரிய சவால் காத்திருந்தது. ரயில் பெட்டிக்குள் கால் வைக்கக்கூட இடமில்லை, அந்த அளவுக்குக் கூட்டம் மொய்த்தது. கூட்டம் மூச்சு முட்ட வைத்தாலும், சாலை டிராபிக் கவலை இல்லாமல் குறித்த நேரத்திற்குள் அவர் எம்.ஜி ரோடைச் சென்றடைந்தார்.

அவர் எவ்வளவு சீக்கிரம் சென்றார் என்றால், நிதானமாக 'Corner House' ஐஸ்கிரீம் பார்லரில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு நண்பருக்காகக் காத்திருக்கும் அளவுக்கு அவருக்கு நேரம் இருந்தது.

ஸ்கூட்டர் பயணத்தின் அவதி

அதே நேரத்தில், எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கிளம்பிய நண்பரோ பெங்களூருவின் நெரிசலான சாலைகளில் சிக்கித் தவித்தார். சிக்னலில் ஊர்ந்து செல்வதற்குள் அவருக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

இடையில் பெங்களூருவுக்கே உரிய வகையில் திடீர் மழையும் குறுக்கிட்டது. மழையில் நனைந்து, டிராபிக்கைத் தாண்டி அவர் வந்து சேருவதற்குள் மிகவும் களைப்படைந்துவிட்டார்.

View post on Instagram

முடிவில் டிவிஸ்ட்

பந்தயத்தின் முடிவில் ஒரு செம ட்விஸ்ட் காத்திருந்தது. மெட்ரோவில் சீக்கிரம் வந்து சேர்ந்தவர், "மச்சான், முதலில் வந்தது என்னவோ உண்மைதான். ஆனா அந்த மெட்ரோ கூட்டத்துல திரும்பப் போக என் உடம்புல தெம்பில்லை. பேசாம உன் ஸ்கூட்டர்லயே என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயேன்!" என்று கேட்பதுடன் வீடியோ முடிகிறது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் விதவிதமாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு பயனர், "GTA 6 கேம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே பெங்களூரு டிராபிக்கும் கிளைமேட்டும் கூட்டணி (Collab) வச்சுருச்சு போல!" என்று கிண்டலடித்துள்ளார். இன்னொருவரோ, "பெங்களூரு டிராபிக் நிஜமாவே ரொம்ப மோசம்" எனத் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார்.