நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவையில் ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் கூட இல்லாததால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இது சபைக்கு ஏற்பட்ட அவமானம் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலங்களவையில் மத்திய கேபினெட் அமைச்சர் (Cabinet Minister) ஒருவர் கூட இல்லாததால், அவை செயல்பாடுகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
கேபினெட் அமைச்சர் யாரும் இல்லாதது சபைக்கு ஏற்பட்ட அவமானம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கண்டனம் தெரிவித்தனர். கேபினெட் அமைச்சர்கள் வராததால் உடனடியாக அவையை ஒத்திவைக்கவும் கோரினர்.
அமைச்சர்கள் இல்லாததால் சலசலப்பு
2001 டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத் தாக்குதலின்போது பயங்கரவாதிகளுடன் போராடி உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், கேபினெட் அமைச்சர் ஒருவர்கூட அவையில் இல்லை என்று சுட்டிக்காட்டினர்.
மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டார். இது குறித்துத் தாம் அரசிடம் பேசுவதாகவும், உடனடியாக ஒரு மூத்த அமைச்சரை வருமாறு கோருமாறும் ஒரு இணை அமைச்சரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
"நடைமுறைகள் எனக்குப் புரிகின்றன. நான் அமைச்சரிடம் கேட்டுள்ளேன். கேபினெட் அமைச்சர்களில் ஒருவர் வர வேண்டும்," என்று ராதாகிருஷ்ணன் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
எனினும், எதிர்க்கட்சிகள் திருப்தியடையவில்லை. கேபினெட் அமைச்சர் வரும் வரை அவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "இது சபைக்கு ஏற்பட்ட அவமானம். கேபினெட் அமைச்சர் வரும் வரை நீங்கள் அவையை ஒத்திவைக்க வேண்டும்," என்று ஆவேசமாகக் கூறினார்.
அமைச்சர் யாரும் வராத நிலையில், சுமார் ஐந்து நிமிடங்கள் காத்திருந்த பின்னர், சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
மக்களவை ஒத்திவைப்பு
மக்களவையில், முன்னாள் சபாநாயகர் ஷிவ்ராஜ் பாட்டீல் இன்று காலமானதை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவை நடவடிக்கைகள் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
சபாநாயகர் ஓம் பிர்லா, பாட்டீலின் மறைவை அறிவித்து, நாடாளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் அவர் செய்த நீண்ட சேவையை நினைவுகூர்ந்தார்.
அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இது ஒரு வழக்கமான கூட்டம் என்றும், அதில் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாகவும் காங்கிரஸ் மூத்த எம்.பி. கே. சுரேஷ் தெரிவித்தார்.
"காங்கிரஸ் கட்சியின் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவரான ஷிவ்ராஜ் பாட்டீலுக்காக எம்.பி.க்கள் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... அவரது மறைவு கட்சிக்கு ஒரு பெரிய இழப்பு," என்று அவர் கூறினார். மேலும், இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடு மற்றும் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஷிவ்ராஜ் பாட்டீலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பொதுச் சேவைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த அனுபவம் வாய்ந்த தலைவர் அவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர், மக்களவை சபாநாயகர் மற்றும் ஆளுநராகப் பதவி வகித்த ஷிவ்ராஜ் பாட்டீல், மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் உள்ள தனது இல்லத்தில் தனது 90-ஆவது வயதில் காலமானார்.


