மே 7 மற்றும் 8 தேதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்து பல வான்வெளி மீறல்கள் மற்றும் ட்ரோன் ஊடுருவல்களை மேற்கொண்டது. இந்தியப் படைகள் பல ட்ரோன்களை வீழ்த்தின, மேலும் ஆரம்ப விசாரணையில் அவை துருக்கிய தயாரிப்பு எனத் தெரியவந்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான போர் எச்சரிக்கை : பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தது. இதனையடுத்து இரு தரப்பிற்கும் மோதல் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் ராணுவம் மே 7 மற்றும் 8 தேதிகளில் பல வான்வெளி மற்றும் ட்ரோன் ஊடுருவல்களை மேற்கொண்டு, இந்திய ராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்க முற்பட்டது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தியா மீது ஏவப்பட்ட 400 ட்ரோன்கள்

இந்த நிலையில் இது தொடர்பாக (வெள்ளிக்கிழமை) இன்று கர்னல் சோஃபியா குரேஷி விளக்கினார். இதன் படி 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், பல ட்ரோன்கள் இந்தியப் படைகளால் வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆரம்ப விசாரணையில் ட்ரோன்கள் துருக்கி தயாரிப்பு ஆசிஸ்கார்ட் சோங்கர் மாடல்கள் எனத் தெரியவந்துள்ளது என கூறினார். 

 இவ்வளவு பெரிய அளவிலான வான் ஊடுருவல்களின் நோக்கம் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை சோதிப்பதும் உளவுத்துறை தகவல்களை சேகரிப்பதுமாகும். ட்ரோன்களின் சிதைவுகளை தடயவியல் விசாரணை செய்யப்படுகிறது. ஆரம்ப அறிக்கைகள் அவை துருக்கிய ஆசிஸ்கார்ட் சோங்கர் ட்ரோன்கள் என்று தெரியவந்துள்ளதாக கூறினார்.


விமான வான்வெளியை மூடாத பாகிஸ்தான்

இதனை தொடர்ந்து விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், "மே 7 ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கிய போதிலும், அதன் பாகிஸ்தான் தனது சிவில் வான்வெளியை மூடவில்லையென கூறினார். சிவில் விமானத்தை கேடயமாகப் பயன்படுத்துகிறது என தெரிவித்தார். இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்வதேச எல்லையில் பறக்கும் சர்வதேச விமானங்கள் உட்பட எதிர்பாராத சிவில் விமானங்களுக்கு பாதுகாப்பற்றது என தெரிவித்தார்.

ட்ரோன் மூலம் பதிலடி கொடுத்த இந்தியா

இதனிடையே பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் நான்கு வான் பாதுகாப்பு தளங்களில் ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஏவப்பட்டன. ட்ரோன்களில் ஒன்று ஒரு AD ரேடாரை அழிக்க முடிந்தது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே கனரக பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன்களைப் பயன்படுத்தி பீரங்கித் தாக்குதலையும் நடத்தியது.. இதன் விளைவாக இந்திய ராணுவ வீரர்களுக்கு சில இழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன. இந்தியாவின் பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவமும் பெரும் இழப்புகளை சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.