மும்பையில் பொது இடத்தில் புறாக்களுக்குத் தீவனம் இட்ட தொழிலதிபருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. புறாக்களின் எச்சம் மற்றும் சிறகுகளால் உயிருக்கு ஆபத்தான தொற்றுகள் பரவும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் புறாக்களுக்குத் தீவனம் வைப்பது உயிருக்கு ஆபத்தான நோய்களைப் பரப்பக்கூடும் எனக் கூறி, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
மும்பை தாதர் பகுதியைச் சேர்ந்தவர் நிதின் ஷெத் (52). இவர் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி, மாஹிம் பகுதியில் உள்ள (தற்போது மூடப்பட்டுள்ள) புறாக்கள் கூடும் இடமான 'கபூதர்கானா'வில் புறாக்களுக்குத் தானியங்களைப் போட்டுள்ளார். மும்பை மாநகராட்சி (BMC) ஏற்கனவே பொது இடங்களில் புறாக்களுக்குத் தீவனம் இடத் தடை விதித்திருந்த நிலையில், அரசாங்க உத்தரவை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இந்த வழக்கு பாந்த்ரா கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் வி.யு. மிசல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நிதின் ஷெத் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினார்.
அவரது வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவருக்கு ₹5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
புறாக்களுக்குத் தீவனம் இடுவது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதோடு, உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றுகளைப் பரப்பும் அபாயம் கொண்டது. இது மனித உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
நிதின் ஷெத் மீது புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. அரசு உத்தரவை மீறி மனித உயிருக்கு அல்லது பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவித்தல் (பிரிவு 223 (b)), உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றைப் பரப்பக்கூடிய கவனக்குறைவான செயல் (பிரிவு 271) ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
ஏன் இந்தத் தடை?
புறாக்களின் எச்சம் மற்றும் சிறகுகள் மூலம் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ஒவ்வாமை பரவுவதாகப் புகார்கள் எழுந்தன. இதைக் கருத்தில் கொண்டு, மும்பை மாநகராட்சி நகரின் பெரும்பாலான பகுதிகளில் புறாக்களுக்குத் தீவனம் இடத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

