உ.பி. அரசின் தீபாவளி செலவுகளை விமர்சித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ளுமாறு கூறினார். அவரது இந்தக் கருத்து இந்து பண்டிகைகளை அவமதிப்பதாக பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டங்களுக்காக உத்தரப் பிரதேச அரசு அதிக அளவில் செலவு செய்வதை விமர்சித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மேற்கோள் காட்டி பேசியது பாஜகவினரின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
சர்ச்சையைக் கிளப்பிய அகிலேஷ் யாதவின் கருத்து
ஒரு கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், "ராமர் பெயரால் நான் ஒரு ஆலோசனையை வழங்குவேன். உலகம் முழுவதும், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அனைத்து நகரங்களும் ஒளியூட்டப்படுகின்றன, அது பல மாதங்கள் நீடிக்கிறது. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். விளக்குகளுக்கும் மெழுகுவர்த்திகளுக்கும் ஏன் பணத்தைச் செலவழிக்க வேண்டும்? அதில் ஏன் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும்? இந்த அரசாங்கத்திடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? இந்த வீண் செலவுகளை அகற்ற வேண்டும். இன்னும் அழகான விளக்குகள் இருப்பதை உறுதி செய்வோம்" என்று பேசினார்.
அயோத்தியில் தீபாவளியைக் கொண்டாட 26 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்ற உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளதை விமர்சிக்கும் விதமாகவே அகிலேஷ் யாதவின் இந்தக் கருத்துகள் அமைந்துள்ளன.
பாஜகவின் கடுமையான விமர்சனம்
அகிலேஷ் யாதவின் இந்தக் கருத்துகளுக்கு பாஜக தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறுகையில், "உ.பி.யின் முன்னாள் முதல்வர் தீபாவளி பண்டிகையின்போது கிறிஸ்துமஸைப் புகழ்ந்து பேசுகிறார். வரிசையாக ஒளிரும் விளக்குகள் அவரது மனதை எரித்துவிட்டதால், 100 கோடி இந்துக்களிடம், 'விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளுக்குப் பணத்தை வீணாக்காதீர்கள், கிறிஸ்துமஸிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்கிறார். அவர் இந்துக்களைவிட கிறிஸ்தவர்களை அதிகமாக நேசிப்பதாகத் தெரிகிறது. அவர் நம்முடைய பூர்வீகப் பண்டிகைகளைவிட வெளிநாட்டுப் பண்டிகைகளைப் பெருமைப்படுத்துகிறார்." எனத் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச அமைச்சர் விஸ்வாஸ் சாரங், “அகிலேஷ் என்ற பெயர் கொண்ட ஒருவர் எப்படி இப்படிச் சொல்ல முடியும்? அவரை அந்தோணி அல்லது அக்பர் என்று அழைப்பது நல்லது என நான் நினைக்கிறேன்." என்றார். மேலும், “தீபாவளி வழிபாட்டையும் விளக்கு ஏற்றுவதையும் ஒருவரால் எப்படி எதிர்க்க முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அகிலேஷ் யாதவும் அவரது குடும்பத்தினரும் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டுவிட்டார்கள் போலத் தெரிகிறது, இது விசாரிக்கப்பட வேண்டும்,” என்று அவர் விமர்சித்தார்.
தீபாவளி செலவுகள் குறித்த அகிலேஷ் யாதவின் இந்தக் கருத்து, உ.பி. அரசியலில் மதச்சார்பற்ற மற்றும் மதரீதியான விவாதங்களை மீண்டும் கிளப்பிவிட்டுள்ளது.


