ஹலோ சொன்னா சத்தம் வரலையா? அலட்சியமா இருக்காதீங்க.. பணத்தை ஆட்டைய போட புது ஸ்கெட்ச்!
Scams போன் அட்டெண்ட் செய்தால் மறுமுனையில் அமைதியாக இருக்கிறதா? அது 'சைலன்ட் கால்' மோசடியாக இருக்கலாம். அதைத் தடுப்பது எப்படி? முழு விவரம்.

Scams
இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றப் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது 'சைலன்ட் கால்ஸ்' (Silent Calls) எனப்படும் புதிய வகை மோசடி பரவி வருவதாகத் தொலைத்தொடர்புத் துறை (DoT) எச்சரித்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்குரிய எண்களைப் புகாரளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சைலன்ட் கால்ஸ் என்றால் என்ன?
தொலைத்தொடர்புத் துறையின் விளக்கப்படி, உங்கள் மொபைலுக்கு ஒரு அழைப்பு வரும், ஆனால் நீங்கள் அதை எடுத்துப் பேசும்போது மறுமுனையில் இருந்து எந்தச் சத்தமும் வராது. இதுதான் 'சைலன்ட் கால்' என்று அழைக்கப்படுகிறது. இது தொழில்நுட்பக் கோளாறு என்று நாம் நினைத்துவிடக் கூடாது. இது திட்டமிட்டு செய்யப்படும் ஒரு மோசடி முயற்சியாகும்.
ஏன் இது ஆபத்தானது?
இந்த அழைப்புகள் சாதாரணமானவை அல்ல. உங்கள் மொபைல் எண் பயன்பாட்டில் உள்ளதா (Active) என்பதை உறுதி செய்ய மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் உத்தி இது. நீங்கள் அழைப்பை எடுத்தவுடன், உங்கள் எண் ஆக்டிவாக இருப்பதை அவர்கள் உறுதி செய்துகொள்வார்கள். அதன் பிறகு, அந்த எண்ணைப் பயன்படுத்திப் பெரிய அளவிலான பிஷிங் (Phishing) தாக்குதல்கள் அல்லது ஹேக்கிங் முயற்சிகளை மேற்கொண்டு உங்கள் பணத்தைத் திருட வாய்ப்புள்ளது.
உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?
இதுபோன்ற அழைப்புகள் வந்தால் அந்த எண்ணை உடனடியாக 'பிளாக்' (Block) செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த எண்களை 'சஞ்சார் சாதி' (Sanchar Saathi) இணையதளத்தில் புகாரளிப்பதன் மூலம் மற்றவர்களையும் இந்த மோசடியிலிருந்து காப்பாற்ற முடியும்.
சஞ்சார் சாதி இணையதளத்தில் புகார் அளிப்பது எப்படி?
மத்திய அரசின் 'சஞ்சார் சாதி' திட்டத்தின் கீழ் உள்ள 'சக்ஷு' (Chakshu) போர்ட்டல் மூலம் நீங்கள் எளிதாகப் புகாரளிக்கலாம்.
1. முதலில் sancharsaathi.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் உள்ள 'Citizen Centric Services' பிரிவில் 'Chakshu' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3. அங்குத் தோன்றும் படிவத்தில், உங்களுக்கு வந்த அழைப்பின் வகை, நேரம் மற்றும் தேதி போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
4. பின்னர் உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கொடுத்து, மொபைலுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணைப் பதிவிட்டுச் சரிபார்க்கவும்.
5. அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்த பிறகு, உங்கள் புகார் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படும்.
விழிப்புணர்வு அவசியம்
வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் மோசடிக்காரர்கள் தொடர்புகொள்ள வாய்ப்புள்ளது. எனவே, தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

