- Home
- Tamil Nadu News
- ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2 நாட்கள் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை
தமிழகத்தில் வரும் 24ம் தேதி (புதன்கிழமை) முதல் 4ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி சென்னையில் இருந்தும் பல்வேறு இடங்களில் இருந்தும் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல உள்ளனர். ரயில்களில் ஏற்கெனவே இருக்கைகள் நிரம்பி விட்டன. மேலும் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்
இதனால் பயணிகள் கவலையில் ஆழ்ந்த நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவண்ணாமலை, கும்பகோணம், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வருகிற டிசம்பர் 23 (செவ்வாய்கிழமை) 255 சிறப்பு பேருந்துகளும், டிசம்பர் 24 (புதன்கிழமை) 525 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேட்டில் இருந்து எங்கெங்கு பேருந்துகள்?
இதேபோல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வரும் டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மொத்தம் 91 பேருந்துகள் இயக்கபட உள்ளன.
இது மட்டுமின்றி மாதவரத்தில் இருந்து 23ம் மற்றும் 24ம் தேதிகளில் மொத்தம் 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. ஞாயிறுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பவும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துகழகம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் எப்படி முன்பதிவு செய்வது?
அரசு பேருந்துகளில் பயணம் செய்ய டிசம்பர் 23 20,107 பயணிகளும், டிசம்பர் 24ம் தேதி 21,206 பயணிகளும், டிசம்பர் 26ம் தேதி 7,578 பயணிகளும், டிசம்பர் 27ம் தேதி 5,972 பயணிகளும், டிசம்பர் 28ம் தேதி 14,256 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆகவே சொந்த ஊர் செல்ல திட்டமிட்டவர்கள் கூட்டம் நெரிசலை தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் இப்போதே உங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

