- Home
- Tamil Nadu News
- டெல்டா முதல் இராமநாதபுரம் வரை.. வெயிலுக்கு நடுவே வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் குளு குளு அப்டேட்!
டெல்டா முதல் இராமநாதபுரம் வரை.. வெயிலுக்கு நடுவே வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் குளு குளு அப்டேட்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிக வெப்பநிலை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை
தமிழகத்தில் வெயில் கொளுத்தியெடுத்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில், கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் வெயிலில் இருந்து விடுதலை கிடைக்காதா மழை பெய்யுமா என மக்கள் ஏங்கித் தவித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
டெல்டாவில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை சுமார் 0.9 கிமீ உயரத்தில், கிழக்கு உத்தரப் பிரதேசம் முதல் மன்னார் வளைக்குடா வரை கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலுங்கானா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. ஏப்ரல் 18ம் தேதி முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்திலும் மழை
ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெயில் எப்படி இருக்கும்?
வெப்பநிலையை பொறுத்தவரை 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

