- Home
- Tamil Nadu News
- சம்பள உயர்வு முதல் ஓய்வூதியம் வரை.. அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக பட்ஜெட்!
சம்பள உயர்வு முதல் ஓய்வூதியம் வரை.. அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக பட்ஜெட்!
Government Employees: அரசுப் பணியாளர்களுக்கான பண்டிகை முன்பணத்தை இருபதாயிரம் ரூபாயாகவும், ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை முன்பணத்தை ஆறாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது.

தமிழக இடைக்கால பட்ஜெட்
தமிழகத்தில் 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அரசு ஊழியர்களுக்கு இதுவரை செய்த திட்டங்களை பட்டியலிட்டார்.
அரசின் திட்டங்களை செவ்வனே செயல்படுத்தி, மக்கள் நலனைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காப்பதில் இந்த அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கி வருகிறது. அரசின் நிதி வருவாய் ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையிலும், நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டிய சூழலிலும் அனைத்துத் தடைகளையும் கடந்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களை இந்த அரசு தொடர்ந்து காத்து வருகிறது. அவர்கள் நலன் காக்க, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை நமது அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீடு
* கடந்த 01.01.2020 முதல் 31.12.2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்கியது
* அதே போன்று ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தியது.
* அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும், அவர்கள் குடும்பத்தினர் பெறும் வகையில் வங்கிகள் மூலம் ஆயுள் காப்பீடு
திருமண முன்பணம்
* பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ஐந்து முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான நிதியுதவி, உயர்கல்வி உதவியாக பத்து இலட்சம் ரூபாய்.
* அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பயில முன்பணம் ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்வி பயில முன்பணம் ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தியது.
*அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண முன்பணம் ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது.
பொங்கல் பரிசு தொகை
* அரசுப் பணியாளர்களுக்கான பண்டிகை முன்பணத்தை இருபதாயிரம் ரூபாயாகவும், ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை முன்பணத்தை ஆறாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது.
* ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை ஆயிரமாக உயர்த்தி வழங்கியது.
* பெண் அரசு அலுவலர்களின் மகப்பேறு விடுப்பை 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தியது என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
11,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
இவை அனைத்திற்கும் மகுடமாய் அமையும் வகையில் அரசு பணியாளர்களின் இருபத்து இரண்டாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்கள். அரசு அலுவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தில், கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட மாத ஓய்வூதியம், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாகப் பெறும் வசதி மற்றும் இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பணிக்கொடை ஆகிய பலன்கள் அடங்கியுள்ளன. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான அரசின் கூடுதல் பங்களிப்பிற்கென ஒட்டுமொத்தத் தொகையாக 11,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

