- Home
- Tamil Nadu News
- ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.. அந்தர்பல்டி அடித்த காங்கிரஸ்.. மாணிக்கம் தாகூருக்கு வார்னிங்!
ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.. அந்தர்பல்டி அடித்த காங்கிரஸ்.. மாணிக்கம் தாகூருக்கு வார்னிங்!
கட்சியில் கூட்டணி குறித்து தனிநபர்கள் பேசியது அவர்களின் சொந்த கருத்து என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணிக்கம் தாகூருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுகவுக்கு அழுத்தம் கொடுத்த காங்கிரஸ்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில், காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 2ம் கட்ட தலைவர்கள் ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு வேண்டும். கூடுதல் தொகுதிகள் வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆட்சியில் பங்கு தர முடியாது என திமுக தலைமை தெளிவாக சொல்லி விட்டது.
திமுகவை எகிறி அடித்த மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் தலைமையும் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என கூறியிருந்தது. ஆனாலும் விடாத மாணிக்கம் தாகூர், 'காங்கிரசால் தான் திமுக ஜெயித்தது. 2ஜி ஊழல் வழக்கில் திமுக மீதான பழியை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது' என்று பேசியிருந்தார். இது இரு கட்சிகளுக்கும் பெரும் வார்த்தை மோதலை உண்டாக்கியிருந்தது. இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற சூழல் ஏற்பட்டது.
திமுக தலைமை டென்ஷன்
மாணிக்கம் தாகூரின் பேச்சு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் புகார் அளித்திருந்தார். மாணிக்கம் தாகூர் பேச்சால் டென்ஷன் ஆன திமுக தலைமை, அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தால் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.
மாணிக்கம் தாகூருக்கு காங்கிரஸ் எச்சரிக்கை
இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை முகப்பேரில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக்கு குறித்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டணி குறித்து யார் பொதுவெளியில் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திமுகவுடன் கூட்டணி தொடரும்
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால், ''திமுக எங்களின் பழைய கூட்டாளி. திமுகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்திருந்தோம். இப்போது சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி வைத்திருக்கிறோம். இந்த கூட்டணி தொடரும். பாஜக உள்ளிட்ட வகுப்புவாத சக்திகளை தோற்கடிக்க திமுகவுடன் ஒன்று சேர்ந்துள்ளோம்.
காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல
கூட்டணி குறித்து காங்கிரஸின் 2ம் கட்ட தலைவர்கள் பேசியது அவர்களது தனிப்பட்ட கருத்து. இது காங்கிரசின் கருத்து அல்ல. கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை திமுக தலைமையிடம் பேசி முடிவெடுக்கும். காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேசக்கூடாது என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
எங்களின் நிலைப்பாட்டை எடுத்து வைப்போம்
திமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.எங்களுக்கும் சில லட்சியங்கள் உள்ளன. கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும்போது எங்களின் நிலைப்பாட்டை எடுத்து வைப்போம்'' என்று தெரிவித்தார்.
கே.சி.வேணுகோபாலின் எச்சரிக்கையால் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பிரச்சனை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாணிக்கம் தாகூரின் ரியாக்ஷன் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

