தோனி 2026 ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா? அவரே சொன்ன தகவல்! முக்கிய அப்டேட்!
சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி 2026 ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

MS Dhoni play in the 2026 IPL season?
இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. ஆனால் பெங்களூருவில் கனமழை காரணமாக ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி கைவிடப்பட்டது.
ஐந்து முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே இந்த சீசனில் அதலபாதாளத்தில் இருக்கிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றி பெற்று 9ல் தோல்வி அடைந்து வெறும் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணியின் படுதோல்வி
ஏற்கெனவே சிஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறி விட்டது. இதனால் மீதமுள்ள போட்டியில் சிஎஸ்கே ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிஎஸ்கே நடப்பு தொடரில் படுதோல்வி அடைந்திருந்தாலும் ஆயுஷ் மத்ரே, உர்வில் படேல், டேவாஸ் பிரேவெல் உள்ளிட்ட பல நல்ல இளம் வீரர்களை அடையாளம் கண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த சீசனில் சிஎஸ்கே வலிமையுடன் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஐபிஎல் சீசனில் களமிறங்கும் தோனி?
இது ஒருபுறம் இருக்க, 43 வயதான சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி 2026 ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த சீசனில் கேப்டன்சியில் தோனி சொதப்பி இருந்தாலும் அடுத்த சீசனில் திறமையான இளம் வீரர்களை வைத்து அவர் கோப்பையை பெற்றுத் தருவார் என ரசிகர்கள் நினைக்கின்றனர்.
இந்நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும்விதமாக தோனி அடுத்த சீசனில் விளையாடுவார் என்றே தகவல்கள் கூறுகின்றன.
தோனி சொன்னது என்ன?
இதை தோனியே சூசகமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறுகையில், ''ரசிகர்களிடம் எனக்குக் கிடைத்த அன்பும் பாசமும், மறந்துவிடக் கூடாது. எனக்கு 43 வயது. நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். இது எனது கடைசி ஆண்டு எப்போது என்று அவர்களுக்குத் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன் என்பது ஒரு உண்மை.
இந்த ஐபிஎல் முடிந்துவிட்டது, பிறகு அடுத்த 6-8 மாதங்களுக்கு என் உடல் இந்த வகையான அழுத்தத்தைத் தாங்க முடியுமா என்பதைப் பார்க்க நான் உழைக்க வேண்டும். ஓய்வுத் திட்டங்கள் குறித்து இப்போது எதுவும் முடிவு செய்ய முடியாது. ஆனால் எல்லா இடங்களிலும் எனக்குக் கிடைக்கும் அன்பும் பாசமும் சிறப்பாக உள்ளது'' என்றார்.
உடற்தகுதியை மேம்படுத்தும் தோனி
தோனியே கூறியபடி அவர் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறார். அடுத்த ஐபிஎல் சீசனுக்கு 10 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், தோனி அடுத்த சீசனுக்கு ஏற்ற வகையில் உடற்தகுதியை சரி செய்து விடுவார். தோனி இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறங்குவதால் அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
