இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் : ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படுகிறதா.?
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை இந்தியா தாக்கியது. விமான நிலையங்கள் மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொண்டதற்கு பதிலடி கொடுக்க இந்தியா களம் இறங்கியுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம், பாகிஸ்தானியர்களை வெளியேற்ற உத்தரவும் என தீவிர நடவடிகையை மேற்கொண்டுள்ளது.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக போர் நடத்த இந்தியா பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டது. முப்படை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியது. இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகை நிகழ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர்- பயங்கரவாதிகள் பலி
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று நள்ளிரவு தீவிரவாதிகளை குறிவைத்து இந்தியா பாகிஸ்தான் பகுதியை தாக்கியது. இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கியது, முசாஃபராபாத், கோட்லி மற்றும் பஹவால்பூரின் அகமது கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு இந்தியா மீது தாக்குல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
அந்த வகையில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற காரணத்தால் ராணுவத்தினர் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட பல கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர், ஜம்மு, தரம்சாலா, அமிர்தசரஸ், லே, ஜோத்பூர், புஜ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையங்கள் மூடல்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் - இந்தியா போர் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் அச்சமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் வீரர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு செல்ல முடியுமா.? என கேள்வி உருவாகியுள்ளது.
ஐபிஎல் போட்டி நடைபெறுமா.?
எனவே மே மாதம் 25ஆம் தேதி தான் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இன்னும் 18 போட்டிகளை பல்வேறு நகரங்களில் நடத்தப்படவுள்ளது. எனவே போட்டி தொடர்ந்து நடைபெறுமா.? அல்லது பாதியிலேயே ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பாக இன்று முக்கிய முடிவு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

