மோடி - முர்மு திடீர் சந்திப்பு: உள்ளே என்ன நடந்தது? டிரம்பின் மிரட்டல் காரணமா?
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம் மற்றும் சர்வதேச பொருளாதார நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம்.

பிரதமர் - குடியரசுத் தலைவர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஆகஸ்ட் 3, ஞாயிற்றுக்கிழமை) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
குடியரசுத் தலைவர் மாளிகை, தனது X சமூக வலைதளப் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார்" என்று ஒரு பதிவை வெளியிட்டது.
மழைக்காலக் கூட்டத்தொடர்
இந்தச் சந்திப்பு, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கியுள்ள பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது. ஜூலை 21-ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் பீகாரில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த விவாதத்தைத் தவிர, வேறு எந்த முக்கிய விவாதங்களும் நாடாளுமன்றத்தில் நடக்கவில்லை.
இந்தியப் பொருட்களுக்கு 25% வரி
மேலும், இந்தச் சந்திப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாகவும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ராணுவ தளவாடங்கள் மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பில், நாடாளுமன்ற முடக்கம் மற்றும் சர்வதேசப் பொருளாதாரச் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

