பிரதமர் நரேந்திர மோடி, டிசம்பர் 11 அன்று என்.டி.ஏ. கூட்டணிக் கட்சி எம்.பி.க்களுக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்க உள்ளார். இந்த சந்திப்பில், நாடாளுமன்ற கூட்டத்தொடர், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 11ஆம் தேதி என்.டி.ஏ. கூட்டணியின் எம்.பி.க்களுக்கு ஒரு சிறப்பு இரவு விருந்து அளிக்க உள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெறும் குளிர்காலக் கூட்டத்தொடரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் அவையில் செயல்படுத்த வேண்டிய வியூகங்களைத் திட்டமிடவும் உதவும் நோக்கில், இந்த விருந்து ஏற்பாடு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

மூத்த பாஜக தலைவர் ஒருவர் அளித்த தகவலின்படி, இந்தக் கூட்டமானது கூட்டணிப் பங்காளிகளுக்கு மத்தியில் மனம் திறந்த, ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்கான தளத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடருக்கான அரசாங்கத்தின் விரிவான திட்டம், மற்றும் என்.டி.ஏ. கூட்டணியின் கூட்டு அரசியல் செயல் திட்டம் ஆகியவை குறித்துப் பிரதமர் விவாதிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் எனத் தெரிகிறது.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் மூத்த அமைச்சர்கள், அவைத் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் இந்த சந்திப்பில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்கள் குறித்து ஆலோசனை

இந்த இரவு விருந்தின்போது, எதிர்வரும் மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஆயத்த உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக, மாநிலத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளின் அணுகுமுறைகளைப் பற்றியும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேற்கு வங்கத் தேர்தலை இலக்காகக் கொண்டு, பாஜக மாநில அளவில் அதன் அமைப்பு ரீதியான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி டிசம்பர் 20ஆம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் ஒரு பெரிய பொது நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார். அப்போது அவர், மேற்கு வங்கத்தின் பாஜக தலைமை நிர்வாகிகளுடன் தேர்தல் உத்தி குறித்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வாய்ப்புள்ளது. மேலும், பாஜக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மேற்கு வங்கம் முழுவதும் நான்கு முதல் ஆறு பிரச்சார யாத்திரைகள் தொடங்கத் தயாராகி வருகிறது. இந்த யாத்திரைகளில் பிரதமர் மோடியும் உரையாற்ற வாய்ப்புள்ளது.

எஸ்.ஐ.ஆர். பணிகள் ஆய்வு

பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்தில், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision - SIR) குறித்த மதிப்பீடும் இடம்பெறலாம்.

வரைவு வாக்காளர் பட்டியல்கள் டிசம்பர் 9, 2025 அன்று வெளியிடப்படும். கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் அவகசாம் ஜனவரி 8, 2026 வரை வழங்கப்படும். இறுதியாக, பிப்ரவரி 7, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.