- Home
- இந்தியா
- மகாராஸ்டிரா உள்ளாட்சி தேர்தலிலும் அடித்து தூக்கிய பாஜக..! உத்தவ், சரத் பவார் மொத்தமா காலி
மகாராஸ்டிரா உள்ளாட்சி தேர்தலிலும் அடித்து தூக்கிய பாஜக..! உத்தவ், சரத் பவார் மொத்தமா காலி
மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் மகாயுதி கூட்டணி 207 தலைவர் பதவிகளை வென்று பெரும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மகா விகாஸ் அகாடி கூட்டணி 44 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்
மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில், ஆளும் மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
மொத்தம் 288 நகராட்சி கவுன்சில்கள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் நடைபெற்ற தேர்தலில், மகாயுதி கூட்டணி 207 தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. இதற்கு மாறாக, எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணி வெறும் 44 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, பாஜக தனிப்பெரும் கட்சியாக 117 தலைவர் பதவிகளை வென்றுள்ளது.
பாஜக வெற்றி
இந்த வெற்றிக்குப் பிறகு, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சமூக வலைதளத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். “மகாயுதி கூட்டணிக்கு மக்களால் வழங்கப்பட்ட இந்த பெரும் ஆதரவு எங்களுக்கு ஊக்கமாக உள்ளது” என அவர் குறிப்பிட்டார். இது 2024 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் மகாயுதி ஆதிக்கம் தொடர்கிறது என்று காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் தரப்பில் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கல், தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை என விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் சந்தேகத்தை கூறினார்.
மகாயுதி கூட்டணி
மகாயுதி கூட்டணியின் வெற்றியை கொண்டாடிய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா 50-க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளதாக கூறினார். “சிவசேனா தானே உண்மையான சிவசேனா என்பதை மக்கள் தீர்ப்பே நிரூபிக்கிறது” என அவர் தெரிவித்தார்.
புனே மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், அஜித் பவார் தலைமையிலான என்சிபி 10 தலைவர் பதவிகளை கைப்பற்றியது. சிவசேனா 4 இடங்களையும், பாஜக 3 இடங்களையும் வென்றுள்ளன. இது அந்த மாவட்டத்தில் மகாயுதி கூட்டணியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது.
விவசாய, பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளில் தாமதம் போன்ற பிரச்சினைகள் இருந்தும், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளாதது அவர்களின் தோல்விக்குக் காரணமாக உள்ளது. வரவிருக்கும் பிரஹன்மும்பை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் முக்கியமான சைகையாகக் கருதப்படுகின்றன.

