ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. ஏமாற்று முகவர்களால் சிக்கிய மேலும் 50 இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாகவும் வீரர்களாகவும் சேர்ந்த இந்தியர்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

26 இந்தியர்கள் உயிரிழப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் சாகேத் கோகலே மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா எழுப்பிய கேள்விகளுக்கு, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.

இதுவரை சுமார் 202 இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படையில் சேர்க்கப்பட்டதாகக் நம்பப்படுகிறது. இவர்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் தொடர் ராஜதந்திர முயற்சிகளால் 119 இந்தியர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர். இன்னும் 50 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உடல்கள் அடையாளம் காண்பதில் சிக்கல்

போர் மண்டலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல் நிலவுகிறது. இதுவரை 10 இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் இருவரது உடல்கள் ரஷ்யாவிலேயே தகனம் செய்யப்பட்டுள்ளன.

மீதமுள்ளவர்களின் உடல்களை அடையாளம் காண, உயிரிழந்த அல்லது காணாமல் போன 18 இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து DNA மாதிரிகள் பெறப்பட்டு ரஷ்ய அதிகாரிகளுடன் பகிரப்பட்டுள்ளன.

ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்

2023-ம் ஆண்டு முதல் தெற்காசிய இளைஞர்களை ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. அதிக சம்பளம், சலுகைகள் மற்றும் கல்வி வாய்ப்புகள் என ஆசை வார்த்தை கூறி முகவர்கள் இந்திய இளைஞர்களை ஏமாற்றியுள்ளனர்.

மாணவர் விசா அல்லது சுற்றுலா விசா மூலம் ரஷ்யா சென்ற பல இளைஞர்கள், அங்கு கட்டாயப்படுத்தப்பட்டு ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைக்கப்பட்டுள்ளனர்.

சில வழக்குகளில், சிறு குற்றங்களில் சிக்கிய இந்தியர்களிடம், சிறைத்தண்டனை அனுபவிப்பதற்குப் பதிலாகப் போருக்குச் செல்லுமாறு ரஷ்ய அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ரஷ்யா-உக்ரைன் போர் பகுதிக்குச் செல்வதையோ அல்லது ரஷ்ய ராணுவத்தில் சேருவதையோ தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.