கதறிய மாமியார்.. விடாத மருமகன்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Crime News: பழனி அருகே பிரிந்து சென்ற மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பிய கணவர், அதற்கு தடையாக இருந்ததாகக் கூறி தனது மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்தவர் அஜ்மத் உசேன்(41). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தஸ்லீமா பேகம் (35). இருவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வருகின்றனர். தஸ்லீமா பேகம் தாய் ஆசியம்மாள் (48) வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் அஜ்மத் உசேனை விவாகரத்து செய்யவும் முயற்சி செய்து வந்துள்ளார்.
தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ விரும்பிய அஜ்மத் உசேன் கடந்த 16ம் தேதி இரவு அமராவதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். அப்போது தஸ்லீமா பேகமும் குழந்தைகளும் வீட்டில் இல்லை. மாமியார் ஆசியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். அஜ்மத் உசேன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மாமியார் ஆசியம்மாள் சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த அஜ்மத் உசேன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் ஆசியம்மாளைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆசியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அஜ்மத் உசேனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பதுங்கியிருந்த அஜ்மத் உசேனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு இடையூறாக இருந்துள்ளார். அவர் இருக்கும் வரை என் குடும்பம் ஒன்று சேராது என்பதால் ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

