- Home
- Cinema
- 'டியூட்' படத்தில் அமைச்சராக அதகளம் பண்ணிய சரத்குமார் - ஷோ ஸ்டீலர் என பாராட்டும் ரசிகர்கள்..!
'டியூட்' படத்தில் அமைச்சராக அதகளம் பண்ணிய சரத்குமார் - ஷோ ஸ்டீலர் என பாராட்டும் ரசிகர்கள்..!
தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள டியூட் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார், பால்வளத்துறை அமைச்சர் அதியமான் அழகப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளார்.

Dude movie Sarathkumar
ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படுபவர் சரத்குமார். வில்லனாகவும், துணை நடிகராகவும் தொடங்கி நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த இவர், தமிழ் சினிமாவின் பிஸியான நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார். சமீபத்தில் '3BHK' என்ற படத்தின் மூலம் தமிழில் அசத்திய இவர், தற்போது பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள 'டியூட்' திரைப்படத்தில் இதுவரை இல்லாத ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரத்குமார், இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் இதுவரை நடித்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதி. பால்வளத்துறை அமைச்சர் அதியமான் அழகப்பன் என்ற கதாபாத்திரத்தில் திரையரங்குகளில் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறார்.
அமைச்சராக நடித்துள்ள சரத்குமார்
தனது குலப்பெருமை மற்றும் சாதிப் பெருமையை மனதில் கொண்டு, பால் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசியல்வாதிதான் அமைச்சர் அதியமான் அழகப்பன். அவரது மகள் குறள் அவருக்கு உயிர். படத்தில் பல தருணங்களில், அதியமான் அழகப்பனாக சரத்குமாரின் இயல்பான நடிப்பு ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. படத்தின் முதல் பாதியில் சரத்குமாரின் அட்டகாசமான நடிப்புதான் முக்கிய அம்சம். அனுபவமும் திறமையும் வாய்ந்த ஒரு நடிகர் கையில் கிடைத்தால், அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இயக்குனர் கீர்த்தீஸ்வரன், சரத்குமாருக்கு வழங்கிய இந்த கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஷோ ஸ்டீலர் சரத்குமார்
நகைச்சுவை மற்றும் எமோஷனலான காட்சிகளில் கூட இவர் ரசிகர்களின் மனதை கவர்கிறார். நிச்சயமாக, 'டியூட்' படத்தின் ஷோ ஸ்டீலர் சரத்குமார்தான் என்று கூறலாம். ஆரம்பம் முதல் இறுதி வரை ஆச்சரியங்களுடன், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன், காதல், குடும்ப உறவுகள், நட்பு என அனைத்தையும் கலந்து ஒரு முழுமையான படமாக திரையரங்குகளைக் வெற்றிநடை போட்டு வருகிறது 'டியூட்'. இப்படத்தில் அகன் கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதனும், குறள் கதாபாத்திரத்தில் மமிதா பைஜுவும் போட்டி போட்டு நடித்துள்ளனர். குடும்ப உறவுகள், நட்பு, காதல் ஆகியவற்றை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இப்படத்தில் காட்டியுள்ளார். இது ஒரு பக்கா ஃபன் ஃபேமிலி என்டர்டெய்னர் படம் என்பதே படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
வரவேற்பை பெறும் டியூட்
கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியுள்ள இப்படம், தமிழுக்கு ஒரு சிறந்த திரைப்பட இயக்குனரை வழங்கியுள்ளது என முதல் காட்சி முடிந்த உடனேயே சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. நட்பு என்றால் என்ன, காதல் என்றால் என்ன, உண்மையான காதல் எது, உறவுமுறை என்றால் என்ன என்பதை எல்லாம் இப்படம் அழகாக விளக்குகிறது. அதே சமயம், மதம், சாதி, குடும்பப் பெருமை, நிறம், பணம் ஆகியவற்றைப் பார்த்து செய்யப்படும் திருமணங்களையும் இப்படம் கடுமையாக விமர்சிக்கிறது. மொத்தத்தில், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அமர்ந்து பார்க்க வேண்டிய அனைத்தும் இப்படத்தில் இருப்பதாக பேசப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

