முதுகலை மாணவர்களே ரெடியா? CUET PG தேர்வு தேதி வந்தாச்சு! டைம் டேபிள் இதோ
CUET PG தேசிய தேர்வு முகமை சிஇயுஇடி பிஜி 2026 தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. மார்ச் 6 முதல் 27 வரை 3 ஷிப்டுகளில் தேர்வுகள் நடைபெறும்.டைம் டேபிள் இதோ

CUET PG
முதுகலை படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET PG) 2026-க்கான முழுமையான கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை (NTA) இன்று வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பங்கேற்பு நிறுவனங்களில் முதுகலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு மிக முக்கியமானது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்வுகள் மார்ச் 6, 2026 அன்று தொடங்கி மார்ச் 27, 2026 வரை நடைபெறவுள்ளன.
தேர்வு நடைபெறும் முறை மற்றும் நேரங்கள்
இந்தத் தேர்வுகள் கணினி வழியில் (Computer Based Test - CBT) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் மூன்று ஷிப்டுகளாகத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.
• முதல் ஷிப்ட்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை.
• இரண்டாம் ஷிப்ட்: மதியம் 12:30 மணி முதல் 2:00 மணி வரை.
• மூன்றாம் ஷிப்ட்: மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை.
மொத்தம் 43 ஷிப்டுகளில் பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவுள்ளன.
பாடவாரியான தேர்வுத் தேதிகள்
மார்ச் 6-ம் தேதி தொடங்கும் தேர்வின் முதல் நாளில், முதல் ஷிப்ட்டில் யோகா (COQP21) பாடத்திற்கான தேர்வு நடைபெறும். அதே நாளில் இரண்டாம் ஷிப்ட்டில் விளையாட்டு உடலியல் (Sports Physiology), சமஸ்கிருதம், உருது மற்றும் டெக்ஸ்டைல் டிசைன் போன்ற பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். மார்ச் 7, 8, 9, 10, 11, 12, 13, 16, 17, 18, 19, 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும் தேர்வுகள் தொடரும்.
மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், என்டிஏவின் அதிகாரப்பூர்வ இணையதளமான nta.ac.in அல்லது pgcuet.samarth.ac.in ஆகியவற்றில் முழுமையான அட்டவணையைச் சரிபார்த்துக்கொள்ளலாம். தங்கள் பாடம் எந்தத் தேதியில், எந்த ஷிப்ட்டில் வருகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கேற்பத் தயாராகுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஹால் டிக்கெட் வெளியீடு குறித்த அறிவிப்பும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

