முதியோருக்கு பெரிய ரிலீஃப்! காரில் ஏற இறங்க கஷ்டமா? வேகன்R-ல் ஸ்விவல் சீட் வசதி அறிமுகம்
மாருதி சுசுகி தனது வேகன்ஆர் மாடலில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பயணத்தை எளிதாக்க ஸ்விவல் சீட் என்ற புதிய சுழலும் இருக்கை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரீனா ஷோரூம்களில் ரெட்ரோஃபிட் ஆக்சஸரியாக கிடைக்கிறது.

வேகன்ஆர் புதிய அம்சம்
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அதிக சிரமமின்றி பயணம் செய்யும் வகையில், மாருதி சுசுகி தனது பிரபல ஹாட்ச்பேக் காரான வேகன்ஆர் மாடலில் ஒரு புதிய, பயனுள்ள வசதியை அறிமுகம் செய்துள்ளது. கார் உள்ளே ஏறுவதும், இறங்குவதும் கடினமாக இருந்தவர்களுக்கு இந்த புதிய அம்சம் பெரிய உதவியாக இருக்கும். இதன் மூலம், அவர்கள் அதிக சுயநம்பிக்கையுடன் மற்றும் சுயாதீனமாக பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதியாக, வேகன்ஆர் காரில் ஸ்விவல் சீட் (சுழலும் இருக்கை) என்ற விருப்ப வசதியை மாருதி சுசுகி கொண்டு வந்துள்ளது.
வேகன்ஆர் காரில் ஸ்விவல் சீட்
இந்த இருக்கை மென்மையாக சுழலும் வகையில் உள்ளதால், காருக்குள் அமர்வதும் வெளியே வருவதும் மிகவும் எளிதாகிறது. இந்த தொழில்நுட்பம் பெங்களூருவை சேர்ந்த TRUEAssist Technology Pvt. லிமிடெட் என்ற ஸ்டார்ட்அப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுசுகி அரீனா ஷோரூம்களில் ரெட்ரோஃபிட் ஆக்சஸரியாக கிடைக்கும். தற்போது, இந்த வசதி பைலட் திட்டமாக இந்தியாவில் 11 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட அரீனா டீலர்ஷிப்களில் ஸ்விவல் சீட் வசதி கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள்
வாடிக்கையாளர்களின் அனுபவம் மற்றும் தேவையைப் பொறுத்து, மேலும் பல நகரங்களுக்கு விரிவாக்கப்படும் என மாருதி சுசுகி தெரிவித்தார். இந்த முயற்சி, IIM பெங்களூருவின் NSRCEL உடன் இணைந்து செயல்படும் மாருதியின் ஸ்டார்ட்அப் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டகேஉச்சி, இந்த ஸ்விவல் சீட் வசதி மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் தினசரி பயணத்தை மேலும் எளிதாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகள் வாரண்டி
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான வேகன்ஆர், அனைவருக்கும் எளிதாக அணுகக்கூடிய காராக மாற இது சரியான மாடல் என்றும் அவர் கூறினார். இந்த ஸ்விவல் சீட்டை 2019க்கு பிறகு தயாரிக்கப்பட்ட புதிய மற்றும் பழைய வேகன்ஆர் கார்களில் பொருத்திக் கொள்ளலாம். இந்த காரின் அமைப்பில் எந்த மாற்றமும் தேவையில்லை. சுமார் ஒரு மணி நேரத்தில் பொருத்தி முடிக்கலாம். இந்த இருக்கை ARAI சோதனைகளை கடந்து அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளது. TRUEAssist நிறுவனம் இந்த ஸ்விவல் சீட் கிட் மீது மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்குகிறது. அருகிலுள்ள அரீனா ஷோரூமில் முன்பதிவு செய்து இந்த வசதியை பெறலாம்.

