மகேஷ் பாபுவின் பிறந்தநாளுக்காக ராஜமெளலி இயக்கத்தில் அவர் நடித்து வரும் SSMB 29 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

SSMB29 First Look Revealed by Rajamouli : தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மகேஷ் பாபு - ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் SSMB 29 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. பான் இந்தியா அளவில் தனது திறமையை நிரூபித்த ராஜமௌலி, இந்தப் படத்தின் மூலம் பான் வேர்ல்ட் பாக்ஸ் ஆபிஸை குறிவைத்துள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார். பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்தான் வில்லன் என்று பேச்சு அடிபடுகிறது.

மகேஷ் பாபு பிறந்தநாளுக்காக வந்த அப்டேட்

மகேஷ் பாபு பிறந்தநாள் நிமித்தமாக SSMB 29 படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஒரு அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் ராஜமெளலி. இது தொடர்பாக ராஜமௌலி போட்டுள்ள ட்விட்டர் பதிவில், பின்னணியில் முகம் தெரியாமல் மகேஷ் பாபுவின் தோற்றம் மறைந்திருக்கிறது. முதலில் ராஜமௌலி அறிவிப்பில் என்ன சொன்னார் என்பதைத் தெரிந்துகொண்டு, பின்னர் மகேஷின் தோற்றத்தைப் பார்ப்போம்.

இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள அன்பான சினிமா ரசிகர்களுக்கு, மகேஷ் பாபு ரசிகர்களுக்கு.. நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கி சிறிது காலமே ஆகிறது. இந்தப் படத்திற்காக நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் படத்தின் கதை, உருவாக்கும் அளவு மிகப் பெரியதாக இருக்கும். எனவே, ஒரு போஸ்டர் அல்லது செய்தியாளர் சந்திப்பு இந்தப் படத்தைப் பற்றித் தெரிவிக்கப் போதுமானதாக இருக்காது.

இந்தப் படத்தின் நோக்கம், ஆழம், பிரம்மாண்டம் ஆகியவற்றைத் தெரிவிக்கும் வகையில் ஒரு சர்ப்ரைஸைத் திட்டமிடுகிறோம். அது வெளியாகும்போது, நாங்கள் எவ்வளவு பெரிய படத்தை உருவாக்குகிறோம் என்பது உங்களுக்குப் புரியும். இந்த சர்ப்ரைஸை நவம்பரில் வெளியிடுவோம். இது நீங்கள் இதற்கு முன் பார்த்திராத, நினைத்துப் பார்க்க முடியாத வகையில் இருக்கும். உங்கள் பொறுமைக்கு நன்றி என்று ராஜமௌலி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

போஸ்டரில் ஒளிந்திருக்கும் ஆச்சர்யம்

இந்தப் பதிவின் பின்னணியில், முகம் தெரியாமல் மகேஷ் பாபுவின் தோற்றம் உள்ளது. மகேஷ் பாபு ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். அதில் திரிசூலம், நந்தி தெரிகின்றன. மேலும், மகேஷ் பாபு மார்பில் இரத்தம் வடிகிறது. வெறும் பின்னணியில் காட்டிய இந்த விவரங்களைக் கொண்டே ராஜமெளலி அமர்க்களப்படுத்தியுள்ளார். இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், இந்தப் படத்தில் மகேஷ் பாபுவின் தோற்றம் உள்ளது. ருத்ராட்சம் இருப்பதால், இந்தப் படத்தில் பக்தி சார்ந்த அம்சங்களும் உள்ளன என்பதை ராஜமெளலி சொல்லாமல் சொல்லியிருக்கிறார். நவம்பரில் என்ன பிரம்மாண்டம் காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.