பிரேசிலின் குவைபா நகரில் ஏற்பட்ட கடும் புயலால், ஹவான் மெகாஸ்டோரில் இருந்த 40 மீட்டர் உயர சுதந்திரச் சிலை சரிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரேசிலின் தெற்கு பகுதியில் உள்ள குவைபா நகரில் திடீரென ஏற்பட்ட கடும் புயல், பெரும் விபத்து காரணமாக மாறியது. நகரின் முக்கிய வணிக வளாகமான ஹவான் மெகாஸ்டோரின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, சுமார் 40 மீட்டர் உயரம் கொண்ட சுதந்திரச் சிலை, பலத்த காற்றின் தாக்கத்தால் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ எதுவும் ஏற்படவில்லை என உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3 இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது அந்தப் பகுதியில் மிகுந்த வேகத்தில் புயல் காற்று வீசியது. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள், சிலை முதலில் காற்றழுத்தத்தால் வளைந்து, திடீரென பல துண்டுகளாக உடைந்து தரையில் விழும் காட்சி பதிவாகியுள்ளது. விழுந்த போது, சிலையின் தலைப்பகுதி பெரிதும் சேதமடைந்ததாக காட்டுகிறது.
உள்ளூர் தகவல்களின் படி, இந்த சிலையின் மொத்த உயரம் சுமார் 114 அடி (40 மீட்டர்). இதில் மேல் பகுதியில் இருந்த சுமார் 24 மீட்டர் உயரம் கொண்ட பகுதி மட்டுமே முறிந்து விழுந்துள்ளது. கீழே இருந்த 11 மீட்டர் உயர சதுர அடித்தளம் பாதுகாப்பாக இருந்ததாக ஹவான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு கடை திறக்கப்பட்டபோது இந்த சிலை நிறுவப்பட்டது, தேவையான அனைத்து தொழில்நுட்ப சான்றிதழ்களும் பெற்றிருந்ததாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சம்பவம் நடந்த உடனேயே அந்த பகுதி முழுவதும் மூடப்பட்டு, பொதுமக்கள் அணுகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில மணிநேரங்களிலேயே நிபுணர் குழுக்கள் அங்கு சென்று, விழுந்த சிலையின் இடிபாடுகளை அகற்றும் பணியில் அமைக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, அந்தப் பகுதியில் 90 முதல் 100 கி.மீ/மணி வேகத்தில் காற்று வீசியுள்ளது.
முன்கூட்டியே கடும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து தொழில்நுட்ப விசாரணை நடத்தப்படும் என ஹவான் நிறுவனம் தெரிவித்துள்ளது. புயல் மட்டுமே காரணமா, அல்லது வேறு காரணிகள் உள்ளனவா என்பது ஆய்வு செய்யப்படும். தற்போது, சிலை விழுந்த பகுதியைத் தவிர, மற்ற பகுதிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


