வெளிநாடுகளில் திட்டமிடப்பட்ட பிச்சையெடுக்கும் செயல்களில் பாகிஸ்தானியர்கள் ஈடுபடுவதால், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் கடுமையான விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சவுதி அரேபியா ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றியுள்ளது.
வெளிநாடுகளில் திட்டமிடப்பட்ட பிச்சையெடுத்தல் மற்றும் குற்றச் செயல்களில் பாகிஸ்தானியர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருவதால், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் பாகிஸ்தான் குடிமக்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் அதிரடி நடவடிக்கை
சவுதி அரேபியா மட்டும் சுமார் 56,000 பாகிஸ்தானியர்களை பிச்சையெடுத்த புகாரில் அந்நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
புனித நகரங்களான மெக்கா மற்றும் மதினாவிற்கு உம்ரா செல்வதற்காக விசா பெற்று வரும் பாகிஸ்தானியர்கள், அங்கு பிச்சையெடுப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளதாக சவுதி அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டே இது குறித்து பாகிஸ்தானை எச்சரித்த சவுதி மத விவகார அமைச்சகம், "இதை தடுக்கத் தவறினால் உண்மையான யாத்ரீகர்கள் மற்றும் ஹஜ் பயணிகளுக்கு விசா வழங்குவதில் சிக்கல் ஏற்படும்" எனத் தெரிவித்திருந்தது.
அமீரகத்தின் விசா கட்டுப்பாடுகள்
ஐக்கிய அரபு அமீரகம், பெரும்பாலான பாகிஸ்தான் குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.
சுற்றுலா விசாக்களில் வருபவர்கள் பிச்சையெடுப்பது மற்றும் தேவையற்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இராஜதந்திர மற்றும் அரசு அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் (Blue Passport) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே விசாக்கள் எளிதாகக் கிடைக்கின்றன.
பாகிஸ்தான் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
பாகிஸ்தானின் ஃபெடரல் புலனாய்வு அமைப்பின் (FIA) இயக்குநர் ஜெனரல் ரிஃபாத் முக்தார், இந்த நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
2025-ம் ஆண்டில் மட்டும் பிச்சையெடுக்கும் கும்பல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 66,154 பயணிகள் விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் சுற்றுலாத் தலங்களான கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக FIA தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் அஜர்பைஜான் 2,500 பேரையும், துபாய் 6,000 பேரையும் வெளியேற்றியுள்ளன.
"பிச்சை ஒரு லாபகரமான தொழில்"
பாகிஸ்தானின் மூத்த வழக்கறிஞர் ராஃபியா ஜகாரியா இது குறித்துக் கூறுகையில், "பாகிஸ்தானில் பிச்சையெடுப்பது என்பது ஏழ்மையால் செய்யும் செயலல்ல; அது ஒரு மிகச்சிறந்த கட்டமைக்கப்பட்ட தொழிலாக மாறியுள்ளது. இப்போது இந்த தொழில் வெளிநாடுகளுக்கும் பரவியுள்ளது" என விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானின் வெளிநாட்டுத் துறை செயலாளரின் புள்ளிவிவரப்படி, வளைகுடா நாடுகளில் பிச்சையெடுத்ததற்காகக் கைது செய்யப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


