கானாவைச் சேர்ந்த எபோ நோவா என்ற தீர்க்கதரிசி, டிசம்பர் 25 முதல் பெருவெள்ளத்தால் உலகம் அழியும் என கணித்துள்ளார். இதை நம்பி பலர் தங்கள் சொத்துக்களை விற்று, அவர் கட்டும் பிரம்மாண்ட படகுகளில் தஞ்சம் புக முயல்கின்றனர்.

உலகம் முழுவதும் நாளை (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆப்பிரிக்க நாடான கானாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த நவீன நோவா?

கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்பவர், தன்னை ஒரு தீர்க்கதரிசியாக அறிவித்துக் கொண்டுள்ளார். இவர் எப்போதும் கிழிந்த சாக்குத் துணியாலான ஆடையை அணிந்து காட்சியளிக்கிறார். இதற்கு முன் இவர் சொன்ன சில கணிப்புகள் உண்மையானதாகக் கூறப்படுவதால், இவரைப் பின்தொடரும் சீடர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டிசம்பர் 25: உலகம் அழியும் நாள்?

“டிசம்பர் 25-ம் தேதி முதல் உலகம் முழுவதும் பயங்கரமான பெருவெள்ளம் ஏற்படும். இந்த மழையும் வெள்ளமும் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதில் உலகம் அழியும்” என்று எபோ நோவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வெள்ளத்தில் இருந்து தப்பிக்க, விவிலியத்தில் கூறப்பட்டுள்ள 'நோவா பேழை' போன்ற பிரம்மாண்டமான மரப் படகுகளை (Arks) இவர் தயாரித்து வருகிறார். சுமார் 10 படகுகளை அவர் கட்டி முடித்துள்ளதாகத் தெரிகிறது.

Scroll to load tweet…

தஞ்சம் புகும் மக்கள்

இவரது பேச்சை நம்பி, பலர் தங்களது வீடு, நிலம் உள்ளிட்ட அனைத்துச் சொத்துகளையும் விற்று, அந்தப் பணத்தை இந்தப் பேழைகளைக் கட்ட வழங்கியுள்ளனர்.

தற்போது ஏராளமான மக்கள் தங்கள் கால்நடைகளுடன் இந்தப் பேழைகள் இருக்கும் இடத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

பைபிள் கூறுவது என்ன?

இருப்பினும், கிறிஸ்தவ மத போதகர்களும் அறிஞர்களும் இந்தக் கணிப்பை மறுக்கின்றனர். நோவாவின் காலத்திற்குப் பிறகு, இனி ஒருபோதும் பூமியை அழிக்கப் பெருவெள்ளம் வராது என்று கடவுள் வானவில்லை சாட்சியாகக் காட்டி மனிதர்களுடன் உடன்படிக்கை செய்ததாக பைபிள் (ஆதியாகமம் 9:11) கூறுகிறது.

உலகம் அழியும் நாள் எப்போது என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும், எந்த மனிதனுக்கும் தெரியாது என்றும் வேதாகமம் குறிப்பிடுகிறது.

சமூக வலைதளங்களில் பலர் இதனை ஏமாற்று வேலை என்றும் மக்களின் பயத்தைப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் செயல் என்றுமவிமர்சித்து வருகின்றனர். "நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்றும் சில நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.