எஸ்.ஏ.சந்திர சேகரும், நானும் பின்னால் இருந்து விஜய் அடுத்த கட்டம் செல்வதற்காக வேலை பார்த்தோம். விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டபோது ரெக்கமண்டேஷனில் உள்ளே வந்தவர் தான் புஸ்ஸி ஆனந்த்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெக முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு தவெக கடும் போட்டியளிக்கும் என கூறப்படும் நிலையில், அக்கட்சியில் மூத்த அரசியல் தலைவர்களான செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் ஐக்கியமானது விஜய்க்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் இணைந்த பி.டி.செல்வகுமார்
அதே வேளையில் தவெகவில் இருந்தும் சிலர் திமுகவில் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார், விஜய்யின் பல்வேறு படங்களூக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்துள்ளார்.
புஸ்ஸி ஆனந்த் மீது கடும் குற்றச்சாட்டு
இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழக மக்களை முட்டாளாக்கி கொண்டிருப்பதாக விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.செல்வகுமார், ''விஜய் மக்கள் இயக்கத்தில் அடுத்த கட்டமைப்பை உருவாக்கியவர் எஸ்.ஏ.சந்திர சேகர் (விஜய்யின் தந்தை) அதற்கு அடுத்தபடியாக இருந்து நான் தான்.
தமிழக மக்களை முட்டாளாக்குகிறார்
எஸ்.ஏ.சந்திர சேகரும், நானும் பின்னால் இருந்து விஜய் அடுத்த கட்டம் செல்வதற்காக வேலை பார்த்தோம். விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டபோது ரெக்கமண்டேஷனில் உள்ளே வந்தவர் தான் புஸ்ஸி ஆனந்த். ஒரு பாண்டிச்சேரிக்காரர் (புஸ்ஸி ஆனந்த்) தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
தவெகவில் உட்கட்சி மோதல்
விஜய்யுடன் நெருக்கமாக இருந்து திமுக சென்ற பி.டி.செல்வகுமார் மட்டுமின்றி தவெகவில் இருக்கும் சில மூத்த நிர்வாகிகளே பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது அதிருப்தியில் இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. புஸ்ஸி ஆனந்துக்கும், தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


