நாகையில் தேர்தல் பிரசாரத்தில் பிரசாரம் செய்த விஜய், திமுக அரசு தனது பயணத்துக்கு கடும் நெருக்கடி கொடுப்பதாக குற்றம்சாட்டினார். நான் தனி இல்லை. தமிழ்நாட்டு பெண்களின் அண்ணன் என விஜய் தெரிவித்தார்.
நடிகர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் மலைக்கோட்டை நகரமான திருச்சி மற்றும் அரியலூரில் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இந்நிலையில், இன்று நாகப்பட்டினத்தில் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த விஜய், அங்கு இருந்து நாகை மாவட்ட எல்லை காரில் வந்தார்.
நாகையில் விஜய் தேர்தல் பிரசாரம்
பின்பு அங்கிருந்து தனது பிரசார வாகனம் மூலம் பிரசாரம் செய்ய இருந்த நாகை புத்தூர் அண்ணா சிலை அருகில் வந்தார். வழியெழுங்கும் தவெக தொண்டர்கள் திரண்டதால் நாகை மாவட்ட எல்லையில் இருந்து பிரசாரம் செய்யும் இடத்துக்கு விஜய் வர பல மணி நேரம் ஆனது. இதனைத் தொடர்ந்து அண்ணாவுக்கு வணக்கம், பெரியாருக்கு வணக்கம் என்று தனது பேச்சை தொடங்கிய விஜய், நாகை மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக் காட்டினார்.
பிரசார பயணத்துக்கு திமுக அரசு நெருக்கடி
மேலும் தனது பிரசார பயணத்துக்கு திமுக அரசு கடுமையான நெருக்கடி கொடுப்பதாக குற்றம்சாட்டினார். அப்போது பேசிய அவர்,''எனது பயணத்துக்கு திமுக அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதிக்கிறது. நாம் பரந்த இடத்தில் பேச சரியான இடம் கேட்டால் வெண்டுமென்றே நெருக்கடி மிக்க மக்கள் அதிகம் நிற்க முடியாத இடத்துக்கு அனுமதி கொடுக்கின்றனர். பஸ்சை விட்டு கிழே இறங்கக் கூடாது. இவ்வளவு நேரம் தான் பேச வேண்டும். அங்கே நிற்க கூடாது என ஏகப்பட்ட நெருக்கடிகள்.
அப்படி பேசாதா; இப்படி பேசாதே ஏகப்பட்ட நிபந்தனைகள்
நான் பேசுவதே 3 நிமிடம் தான். அதிலும் அதை பேசாதீர்கள்; இதை பேசாதீர்கள் என்றால் நான் எதைத் தான் பேசுவது. பேருந்துக்குள் இருக்க வேண்டும். மக்களை பார்த்து சிரிக்க கூடாது. மக்களை பார்த்து கையசைக் கூடாது. இப்படி தான் கையை தூக்க வேண்டும். இப்படி கையை அசைக்க கூடாது என நிபந்தனைகளை பார்த்தால் காமெடியாக உள்ளது. நான் பிரசாரம் செய்ய சென்ற அரியலூரில் மின்வெட்டு, திருச்சியில் மைக் வயர் கட்டு என இப்படியாக செய்வீர்கள் சிஎம் சார்.
நான் தமிழ்நாட்டு பெண்களின் அண்ணன்
உங்களுடைய எண்ணம் தான் என்ன? நான் மக்களை சந்திக்க கூடாதா? அவர்களின் குறைகளை கேட்க கூடாதா? அடக்குமுறை அராஜகம் வேண்டாம் சிஎம் சார். நான் தனி ஆள் இல்லை சார். நாங்கள் மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி சார். மாபெரும் பெண்கள் சக்தியின் சகோதரர் சார். இந்த பூச்சாண்டி வேலையை விட்டு தில்லாக தேர்தலை சந்திக்க வாங்க சிஎம் சார். பார்த்து விடுவோம்'' என்று தெரிவித்தார்.


