நாட்டையே உலுக்கிய திருவள்ளூர் சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கயவனுக்கு இரட்டை ஆயுள் தண்டை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி மர்ம நபர் ஒருவன், சிறுமியின் வாயை கைகளால் பொத்தி அருகே இருந்த மாந்தோப்புக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடி விட்டான்.
சிறுமி பாலியல் வன்கொடுமை
இதில் உடல்நிலை மோசமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சுமார் 13 நாட்கள் கழித்து சிறுமியை சீரழித்த கயவனை காவல்துறையினர் கைது செய்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த 35 வயதான ராஜு பிஸ்வகர்மா என்ற கயவன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
இரட்டை ஆயுள் தண்டனை
பின்பு கொடூரன் ராஜு பிஸ்வகர்மா சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம் சிறுமியை சீரழித்த ராஜு பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.1.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
5 மாதங்களில் தீர்ப்பு
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியை காவல்துறை கொஞ்சம் தாமதமாக பிடித்தாலும் 5 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


