திருப்பத்தூரில் ரூ.10 கோடி ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் நோட்டீஸ் வந்ததால் பிரியாணி மாஸ்டர் அதிர்ச்சியில் உறைந்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் துரைசாமி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அமீர்பாஷா (33). பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீர்பாஷாவுக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த ஒரு நோட்டீஸ் அவரை தூக்கிவாரிப்போட்டது.
ரூ.18 கோடி வரி செலுத்த வேண்டும்
அதாவது அமீர்பாஷா சென்னையில் 'அமீர் டிரேடிங் கோ' என்கிற நிறுவனத்தை நடத்தி ரூ.18 கோடி ஜி.எஸ்.டி வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும், உடனே அந்த பணத்தை செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருந்தது. 'அன்றாட வயிற்று பிழைப்புக்காக பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வரும் நான் சென்னையில் கம்பெனி நடத்தினேனா? என்னடா இது பிராடுத்தனமாக இருக்கு' என்று அமீர்பாஷா புலம்பித் தள்ளினார்.
பான் கார்டை வைத்து மர்ம நபர்கள் மோசடி
அமீர்பாஷாவின் பான் கார்டை வைத்து மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமீர்பாஷா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தனது பான் கார்டை வைத்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டார்.
சமீப காலமாக மோசடிகள் அதிகரிப்பு
சமீப காலமாக ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பான் கார்டை வைத்து மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பரீதியாக இந்த கும்பல்கள் மோசடியில் ஈடுபடுவதால் காவல்துறையினர் பெரும்பாலான மோசடிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மாநில காவல்துறைகள் மட்டுமின்றி மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டு மோசடிகளை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


