நாட்டிலுள்ள விவசாயிகளை அகதிகளாக்கி, வேளாண்மையைத் தனியார் பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் ‘விதை’ சட்ட வரைவு - 2025ஐ இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “வேளாண் பெருங்குடி மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் ‘விதை’ சட்ட வரைவு - 2025 என்ற புதிய சட்ட வரைவினை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. வேளாண்மையைப் பெருநிறுவன (கார்ப்பரேட்) தொழிலாக்கி, உணவளித்து உயிர் காக்கும் விவசாயிகளைக் கொத்தடிமைகளாக மாற்றும் சதித்திட்டமே இக்கொடும் சட்ட வரைவாகும்.
இந்திய விதைச் சட்டம் 1966 மற்றும் விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றை மாற்றி, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு விற்கப்படும் அனைத்து விதைகளின் தரம், உற்பத்தி, விற்பனை மற்றும் வாங்குதலை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் ‘விதை’ சட்ட வரைவு - 2025 என்ற புதிய வரைவினை பாஜக அரசு இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகின்றது.
இப்புதிய வரைவின் படி, இனி நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட விதைகளை மட்டுமே சந்தையில் விற்பனை செய்ய முடியும். அவ்வாறு விற்கப்படும் விதைகளின் முளைப்பு விகிதம் உள்ளிட்ட பிற விவரங்களை ஆய்ந்தறிந்து ஒட்டுத்தாள்களில் வெளியிட வேண்டும் என்ற வரைவு விதியின் மூலம் பெருநிறுவனங்கள் மட்டுமே இனி விதைகளைச் சந்தைகளில் விற்க முடியும் என்ற நிலையை உருவாக்க முனைகிறது இந்திய ஒன்றிய அரசு. இதன் மூலம் காலம்காலமாகத் தங்களுக்கு வேண்டிய விதைகளைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும் வேளாண் பெருங்குடி மக்களின் தற்சார்பு வாழ்வியல் உரிமையை அழித்தொழித்து, அவர்களை விதைகளுக்காகக் கையேந்தி நிற்க வைக்கும் நிலையை உருவாக்குவது பேரவலமாகும்.
மேலும், விதைகளின் விற்பனை விலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை இச்சட்ட வரைவு இந்திய ஒன்றிய அரசிற்கு மட்டுமே வழங்குவதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும். மேலும், அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய விதைகளை அரும்பாடுபட்டு மீட்டெடுத்து சேகரிக்கும் மறைந்த ஐயா நெல் ஜெயராமன் போன்ற வேளாண் தன்னார்வலர்களின் முயற்சியை இல்லாதொழிக்கவும் இச்சட்ட வரைவு வழிவகுப்பது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.
இப்புதிய சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், இனி இந்த நாட்டில் வாழும் எந்த ஒரு வேளாண் பெருங்குடி மகனும், எந்தவொரு விதையை வாங்க வேண்டும் என்றாலும் ஒன்றிய அரசு அங்கீகரித்த அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிறுவனங்களிடம் மட்டுமே வாங்கி விதைக்க முடியும். அதுமட்டுமின்றி மரபணு மாற்றப்பட்ட விதைகள் மற்றும் ஒரு முறை மட்டுமே முளைக்கும் திறன் பெற்ற விதைகள் என்று, இனி விதை விற்பனை நிறுவனங்கள் முடிவு செய்யும் விதைகளை மட்டுமே விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகும். மேலும், விதைக்கேற்ற வகையில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டிய உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் ஆகியவற்றையும் விதை விற்பனை நிறுவனங்களே தீர்மானிக்கும். விதைகள் முதல் விளைபொருள் வரை, விதைப்பது முதல் விற்பனை வரை இந்நாட்டின் விவசாயிகள் இனி எதை விதைக்க வேண்டும், எதை விளைவிக்க வேண்டும் என்பதைத் தனியார் பெருநிறுவனங்களே முடிவு செய்யும்.
தனியார் நிறுவனங்கள் தருவதுதான் விதை, அவர்கள் நிர்ணயிப்பதுதான் விலை என்ற நிலையை உருவாக்குவது, பெரும் பஞ்சம் ஏற்பட வழிவகுத்து நாட்டினை பேரழிவினை நோக்கியே இட்டுச்செல்லும். எப்படி ஒன்றிய அரசு விண்ணூர்திகளைத் தனியாருக்கு தாரைவார்த்து, நாட்டு மக்களை விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாகத் தவிக்கவிட்டதோ அதைப்போல, விதை உரிமையை மொத்தமாகத் தனியாருக்குத் தாரை வார்த்து, நாட்டு மக்கள் நாளை நீண்ட வரிசையில் உணவுக்குக் கையேந்த வைக்கும் கொடுமையும் நம் கண் முன்னே அரங்கேறுவதற்கான தொடக்கமே இப்புதியச் சட்ட வரைவாகும்.
இனி, இந்திய ஒன்றிய அரசுதான் விதைகளுக்கான விற்பனை விலையை நிர்ணயிக்கும் என்று இப்புதிய சட்ட வரைவு இன்றைக்குக் கூறினாலும், எரிபொருள் விலை நிர்ணயம்போல எதிர்காலத்தில் விதைகளின் விலை நிர்ணயமும் தனியார் பெருநிறுவனங்களிடம் அரசு ஒப்படைக்காது என்பது என்ன நிச்சயம்? அப்படி ஒரு நிலை உருவானால், அது சிறு, குறு விவசாயிகளை வேளாண்மையை விட்டே முற்று முழுதாக வெளியேற்றவே வழிவகுக்கும்.
ஆகவே, விளைநிலங்களைப் பறித்து, விவசாயிகளை அகதிகளாக்கி, வேளாண்மையைத் தனியார் பெருநிறுவனத் தொழிலாக்கும் ‘விதை’ சட்ட வரைவு - 2025ஐ இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எக்காரணம் கொண்டும் நிறைவேற்றக்கூடாது என்றும், உடனடியாக இப்புதிய சட்ட வரைவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


