விஜய் சினிமாவை விட்டுவிட்டு மொத்தமாக அரசியலுக்கு வந்துவிட்டார். நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பலம் வாய்ந்தவர் என தவெக அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விஜய் தற்பொழுது நடிகர் கிடையாது முன்னாள் நடிகர். விஜய் நடிப்பை முற்றிலுமாக விட்டுவிட்டு அரசியலுக்கு மக்கள் சேவை செய்வதற்காக வந்துவிட்டார். 

ஈரோடு மாநாட்டிற்கு வந்தவர்களும் நடிகரை பார்ப்பதற்காக வரவில்லை. தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சியாக இருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவரை தான் பார்க்க வந்தார்கள். விஜய் நடிப்பை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால் அரசியலில் தற்பொழுதும் சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று நான் குறிப்பிட விரும்பவில்லை. நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பவர்புல்லானவர்.

தவெக சார்பில் மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக அது இருக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கையாகவும், சமூக நீதிக்கான தேர்தல் அறிக்கையாகவும், தொழில் வளர்ச்சி, இயற்கை வளங்களை பாதுகாப்பது என சமநிலைப்படுத்தக்கூடிய தேர்தல் அறிக்கையாக இருக்கும்.

களத்தில் யார் இல்லை என்று மக்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு கட்சிக்கு காசு கொடுக்காமல் வாகனங்கள் ஏற்பாடு செய்யாமல் இவ்வளவு கூட்டம் வருமா? அப்படி என்றால் மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது? களத்தில் யார் இருக்கிறார்கள் என்று மக்களுக்கே தெரியும். SIR யை பொறுத்த வரை தமிழக வாக்காளர்கள் அனைவரும் அவர்களது பெயர்கள் அந்த பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பெயர் இல்லை என்றால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்து தரப்படும். எங்களை பொறுத்தவரை அனைவருக்கும் ஓட்டுரிமை இருக்க வேண்டும் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படக்கூடாது என்றார்.