திமுக ஆட்சி காலம் நிறைவடைய கிட்டத்தட்ட 70 நாட்களே உள்ள நிலையில் தற்போது மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பது கண்துடைப்பு நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “திமுகவின் ஆட்சி முடிவதற்கு இன்னும் தோராயமாக 70 நாட்களே உள்ள நிலையில், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளது அப்பட்டமான கண் துடைப்பு நாடகமே. மக்களை ஏமாற்றி திசைதிருப்ப முயலும் முதல்வர் அவர்களிடம் சில நேரடிக் கேள்விகள்:

1. ஆட்சிக்கு வந்து, 55 மாதங்கள் தாமதமாக மடிக்கணினிகள் வழங்குவதேன்?

2. செல்வி ஜெயலலிதா அம்மாவின் புரட்சிகரத் திட்டத்தை நிறுத்த முயற்சித்த பின்பு மாணவர்களின் கோபத்திற்கு ஆளானதாலேயே மடிக்கணினிகள் வழங்க முடிவு செய்துள்ளீர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

3. திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 163-ல், டேப்லெட் மற்றும் 10GB டேட்டா கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தவே, டேப்லெட் வழங்குவோம் என்று அறிவித்தீர்கள். அப்படியிருக்க, 55 மாதங்களாக மடிக்கணினியும் வழங்காமல், டேப்லெடும் வழங்காமல் கிடப்பில் போட்டது ஏன்?

4. அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரிக்குள் நுழையும் முன்பே மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், உங்களது ஆட்சியில் பள்ளி மாணவர்கள் ஏன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்?

5. உங்களது ஆட்சியில் கடந்த பட்ஜெட்டில் 20 லட்சம் மடிக்கணினிகளுக்கு ஒதுக்கீடு செய்ததாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்றோ 10 லட்சம் மடிக்கணினிகள் மட்டுமே கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. மீதமுள்ள 10 லட்சம் மடிக்கணினிகள் என்னவாயின? உங்களுக்கு ஊழல் செய்வது புதிதல்ல என்பது தெரியும். ஆனால், மாணவர்களின் கல்வியிலும் ஊழல் செய்ய வேண்டுமா?

மக்களிடம் இத்தனை கேள்விகள் எழும் வேளையில், வெற்று விளம்பரத்திற்காக இத்திட்டத்தை அரைகுறையாகச் செயல்படுத்த நினைக்கும் திமுக அரசை, மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.