பணி ஆணை வழங்குவது முதல் ஒப்பந்தம் வழங்குவது வரை பல்வேறு வழிகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமலாக்கத்துறை. ரூ.1020 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய கடிதம் எழுதி உள்ளது.
தமிழகத்தில் நிர்வாகத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் கே.என்.நேரு ரூ.1020 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை எழுதியுள்ள கடிதத்தில், “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2 ஆயிரத்து 538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரகளை நியமனம் செய்தல், டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது.
மேலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நியமனம், டெண்டர் முறைகேடுகள், சதித் திட்டங்கள் மூலம் ரூ.1020 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. இந்த ஊழலுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
ஊழல் தொடர்பாக தமிழக காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை காவல் துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. அதன் தொடர்ச்சியாக தற்போது நகராட்சி நிர்வாக துறையில் ரூ.1020 கோடி ஊழல் தொடர்பாக அமைச்சர் கேஎன் நேரு, அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என இரண்டாவது முறையாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களுடன் கூடிய 252 பக்க அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “திமுக ஆட்சியில் ஊழல் நடைபெறுவது பெரிய விஷயம் இல்லை. ஆனால் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள் மலைப்போல் குவிந்துள்ளன. இதனை தமிழக அரசு தவிர்க்க இயலாது. அமைச்சர் கே.என்.நேருவின் கீழ் நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு ரூ.888 கோடி ஊழலைத் தொடர்ந்து தற்போது ரூ.1020 கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை 252 பக்கங்கள் கொண்ட அறிக்கையை டிஜியிடம் சமர்ப்பித்துள்ளது. அமைச்சர் நேரு உறவினர்கள் மூலமாக ஒப்பந்த தாரர்களிடம் இருந்து 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் சாட், லஞ்ச கணக்கீட்டு பட்டியல், ஹவாலா மூலம் பணமோசடி தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை வழங்கி உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசில் சிறப்பாக செயல்பட்ட ஒரே துறை கலக்சன், கமிஷன், கரப்சன் துறை மட்டும் தான். அமைச்சர் நேரு விவகாரத்தில் இழுத்தடிப்பதை விட்டுவிட்டு டெண்டர் முறைகேடு, பணியாளர் நியமன ஊழல் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


