திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்ட பி.ஆர்.பாண்டியன் மீதான 13 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவராகவும், காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருபவர் மன்னார்குடியை சேர்ந்த பி.ஆர்.பாண்டியன். கடந்த 2015 ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தி்ல் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் உள்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு கூறிய திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இருவரது சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உயர்நிதிமன்றத்தில் இந்த உத்தரவால் பி.ஆர்.பாண்டியன் பெரும் நிம்மதி அடைந்துள்ளார். இதனால் பி.ஆர்.பாண்டியனும், செல்வராஜும் சிறையில் இருந்து வெளியே வர உள்ளனர்.


