தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில், ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தவெக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மூன்றாவது ஆண்டாக இந்த வருடமும் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை கெளரவிக்கும் விழா பிரம்மாண்டமாக சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

ஆதவ் அர்ஜுனாவின் வீடியோ வைரல்

முன்னதாக தனியார் விடுதியில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகள் குறித்து ஆய்வை மேற்கொண்டனர். அப்போது இருவரும் உரையாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலகிவிடும் என்றும், எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வர தயாராக இல்லை. மேலும் அண்ணாமலையாவது 10 பேரை கூட வைத்துக்கொண்டு தேர்தலில் நின்று 18 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால் இபிஸ்-ஐ நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை என்றும் சிரிப்புடன் ஆதவ் அர்ஜுனா புஸ்ஸி ஆனந்திடம் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அதிமுகவினர் கொந்தளிப்பு

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் குறித்து அதிமுகவினர் விமர்சிக்க எடப்பாடி பழனிசாமி தடை விதித்த நிலையில் ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ வைரலாகி வருவது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.