அட்சய திருதியை அன்று விடியற்காலையில் நீராடி, மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியை வழிபடுவது சிறந்தது. இந்நாளில் தங்கம் வாங்குவது மட்டுமன்றி, ஏழைகளுக்கு தானம் செய்வது (உணவு, ஆடை) பன்மடங்கு பலனைத் தரும். கோபத்தைத் தவிர்த்து, மனத்தூய்மையுடன் அறச்செயல்களில் ஈடுபடுவது முக்கியம்.

அட்சய திருதியை மிகவும் புனிதமான நாள் என இந்து மத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. இத முடிவில்லாத செல்வம், வெற்றி, ஆனந்தத்தை தரும் அற்புதமான நாளாக கருதப்படுகிறது. அதனால் தான் அட்சய திருதியை அன்று பொருட்கள் வாங்குவதை விட புண்ணிய காரியங்கள், மந்திர ஜபம், ஹோமம், தான தர்மங்கள் செய்வதை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. இந்த நாளில் புதிய முதலீடுகள் செய்வதும், நல்ல நேரத்தில் புதிய தொழில் துவங்குவதும் வாழ்வில் ஆரோக்கியம், செல்வ வளம், முக்தி ஆகியவற்றை தரும் என சொல்லப்படுகிறது.

அட்சய திருதியை பிறந்த கதை :

புராணங்களின் படி மகாபாரதத்தில், பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது காட்டில் அவர்களை தேடி வரும் முனிவர்கள், ரிஷிகள் ஆகியோருக்கு சூரிய பகவான் அளித்த அட்சய பாத்திரத்தின் உதவியுடன் விருந்து சமைத்து, உபச்சாரம் செய்து வந்தாள் திரெளபதி. இந்த அட்சய பாத்திரமானது கேட்க கேட்க உணவுகளை கொடுத்துக் கொண்டி இருக்கும். ஆனால் அது திரெளபதி சாப்பிட்டு முடித்து, பாத்திரத்தை கழுவி கவிழ்த்து வைக்கும் வரை தான். ஒருமுறை கவிழ்த்து விட்டால், மீண்டும் மறுநாள் தான் அட்சய பாத்திரம் உணவை தரும் என்ற நிபந்தனையுடன் தான் சூரிய பகவான் அதை வரமாக அளித்தார்.

ஒருமுறை கோபக்காரரான துர்வாச முனிவர், தாமதமாக பாண்டவர்கள் இருக்கும் குடிசைக்கு வந்தார். அதற்குள் அனைவரும் உணவு சாப்பிட்டு முடித்து, அட்சய பாத்திரத்தை கவிழ்த்து வைத்து விட்டனர். தான் குளித்து விட்டு வருவதற்குள் உணவு தயார் செய்யும் படி கூறி விட்டு சென்றார். அட்சய பாத்திரத்தை கவிழ்த்து விட்டதால் இனி உணவு பரிமாற முடியாமல் தவித்த திரெளபதி, விஷயத்தை தர்மனிடம் சொன்னாள். இதற்கு வழி சொல்ல பகவான் கிருஷ்ணராலேயே முடியும் என நினைத்த தர்மன், கிருஷ்ணரை அழைத்தார். உடனடியாக அங்கு வந்த கிருஷ்ணர், உணவு ஏதாவது மீதம் இருந்தால் கொண்ட வரும் படி கூறினார். உணவு ஏதும் இல்லை என திரெளபதி கூறி, அட்சய பாத்திரத்தை எடுத்து வரும் படி கூறி, அதில் ஒட்டி இருந்த ஒரே ஒரு பருக்கை சாதத்தை எடுத்து, "விஸ்வரூபிக்கு அர்ப்பணம்" (அனைத்து உயிர்களில் கலந்திருக்கும் பரம்பொருளுக்கு அர்ப்பணம்) என சொல்லி சாப்பிட்டார் கிருஷ்ணர். இதனால் உலக உயிர்கள் அனைத்தின் பசியும் அடங்கியது. குளிக்க சென்ற துர்வாசரும் தனது பசி அடங்கி விட்டதாக கூறி, பாண்டவர்களுக்கு சாபம் அளிப்பதற்கு பதில் வாழ்த்தி விட்டு சென்றார். இது நடந்தது அட்சய திருதியை நாளில் என சொல்லப்படுகிறது.

புராணங்களில் அட்சய திருதியை :

- மகாவிஷ்ணு தனது 6வது அவதாரமான பரசுராம அவதாரம் எடுத்தது இந்த நாளில் தான். - வறுமையில் இருந்த சுதாமா, ஒரு பிடி அவலை கிருஷ்ணருக்கு அளித்து குசேலராக செல்வந்தராக உயர்ந்தது இந்த நாளில் தான். - புனித நதியான கங்கை நதி பூமியிக்கு வந்தது அட்சய திருதியை நாளில் தான்.

அட்சய திருதியை அன்று அவசியம் செய்ய வேண்டியவை :

1. தானங்கள் - ஏழைகளுக்கு, உதவி தேவைப்படுபவர்களுக்கு உணவு, உடை, பணம், தேவையான பொருட்களை தானம் அளிக்க வேண்டும். 2. பூஜைகள் செய்வது - மகாவிஷ்ணு, மகாலட்சுமி, விநாயகர், குபேரர் ஆகியோருக்கு வீடு மற்றும் கோவிலில் பூஜை செய்து வழிபட வேண்டும். 3. மந்திர ஜபம் - ஏதாவது ஒரு மந்திரத்தை குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஜபம் செய்யலாம். பகவத் கீதை, பாகவதம், விஷ்ணு புராணம் போன்ற புனித நூல்களை படிக்கலாம். தியானம் செய்யலாம். 4. புதிய தொடக்கம் - பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த முறையில் தங்கம், புதிய வாகனங்கள் வாங்கலாம், புதிய தொழில் துவங்கலாம், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். 5. விரதம் - சிலர் பாதி நாளும், இன்னும் சிலர் முழு உபவாசமாகவும் விரதம் இருப்பார்கள். இத மனம், உடல், வார்த்தைகள் ஆகியவற்றை தூய்மை ஆக்கும். 6. உணவு முறை - பால், பழம், சைவ உணவுகளை உண்ண வேண்டும். எண்ணெய், மசாலா, அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். 7. தூய்மை அவசியம் - உணவு, சொல், செயல் என அனைத்திலும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். பக்தியில் மனதை செலுத்த வேண்டும். இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.