வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விவாதம், மோடிக்கும் பிரியங்கா காந்திக்கும் இடையே அரசியல் மோதலாக வெடித்துள்ளது. முஸ்லிம் லீக்கிற்காக நேரு பாடலை மாற்றியதாக மோடி குற்றம் சாட்ட, பாஜக வரலாற்றைத் திரிப்பதாக பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

தேசியப் பாடலான "வந்தே மாதரம்" இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு விவாதம், பிரதமர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான அரசியல் மோதலாக மாறியுள்ளது.

விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கருத்துகளைத் திரித்துக் கூறுவதாகக் குற்றம் சாட்டினார். வரவிருக்கும் வங்காள சட்டமன்றத் தேர்தலை மனதில்கொண்டே அரசாங்கம் இந்தப் பிரச்சினையைக் கிளப்புவதாகவும் குற்றம் சாட்டினார்.

பிரியங்கா குற்றச்சாட்டு

"நாம் ஏன் வந்தே மாதரம் குறித்து விவாதிக்கிறோம்?" என்று மக்களவையில் கேள்வி எழுப்பிய பிரியங்கா காந்தி வத்ரா, "இந்தப் பாடல் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உயிர்ப்புடன் இருக்கும்போது, இதைப் பற்றி விவாதிக்க எந்த அவசியமும் இல்லை" என்று உறுதிபடத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், "வங்காளத் தேர்தல் விரைவில் வரவிருப்பதால் தான், அரசாங்கம் வந்தே மாதரம் குறித்து விவாதம் நடத்த விரும்புகிறது. அரசாங்கம் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்க்க விரும்பாததால்தான், நாம் கடந்த காலத்திலேயே மூழ்கியிருக்க வேண்டும் என்று விரும்புகிறது," என்று ஆளும் தரப்பைக் குற்றம் சாட்டினார்.

மோடியின் விமர்சனம்

முன்னதாக, மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக்கின் அழுத்தத்திற்கு நேரு பணிந்து, வந்தே மாதரத்தின் சில முக்கிய வரிகளை நீக்கிவிட்டார்” என்று குற்றம் சாட்டினார்.

"வந்தே மாதரம் முஸ்லிம்களை எரிச்சலூட்டலாம் என்று ஜின்னாவின் கருத்தை நேரு 1937-ல் ஆதரித்தார். முஸ்லிம் லீக்கின் கோஷங்களைக் கண்டிக்காமல், அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு எழுதிய கடிதத்தில் ஜின்னாவின் உணர்வுகளுக்குச் சம்மதம் தெரிவித்தார். 'ஆனந்தமடம்’ நாவலின் பின்னணி முஸ்லிம்களை எரிச்சலூட்டக்கூடும்' என்று அவர் எழுதினார்," என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

"நாடு முழுவதும் உள்ள தேசியவாதிகள் இதற்கு எதிராகப் பேரணி நடத்தியபோதும், காங்கிரஸின் முடிவு மாறவில்லை. இந்தப் மனப்பான்மைதான் இறுதியில் நாட்டின் பிரிவினைக்கு வழிவகுத்தது," என்றும் மோடி கூறினார்.

நேருவின் கடிதம்

பிரதமர் மோடி பிரச்சினையைத் திரித்துக் கூறுவதாகப் பிரியங்கா காந்தி பதிலளித்தார். தனது கொள்ளுத் தாத்தாவும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு, வந்தே மாதரம் பற்றிய சர்ச்சை மதவாதிகளால் உருவாக்கப்பட்டவை என்று கூறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸின் மற்ற தலைவர்களும், அதன் கூட்டணிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த ஆ.ராஜா உள்ளிட்டோரும், நேருவின் கருத்துகளை பாஜக திரிப்பதாகக் குற்றம் சாட்டினர்.

பங்கிம் சந்திர சட்டர்ஜியால் 1875-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி இயற்றப்பட்டு, பின்னர் 1882-ல் 'ஆனந்தமடம்' நாவலில் இடம்பெற்ற 'வந்தே மாதரம்' பாடல், விடுதலைப் போராட்டத்தின்போது தேசியவாதிகளின் போர் முழக்கமாக மாறியது குறிப்பிடத்தக்கது.