திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் 50 இடங்களை கைப்பற்றி பாஜக மிகப்பெரிய சாதனையை பதிவு செய்துள்ளது. பெரும்பான்மைக்கு அருகில் வந்துள்ள நிலையில், அடுத்த மேயர் யார் என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக (NDA) இந்த முறை மிகப்பெரிய சாதனையை பதிவு செய்துள்ளது. மொத்தம் 100 வார்டுகளில் 50 இடங்களை கைப்பற்றியுள்ள பாஜக, முழு பெரும்பான்மை பெற தேவையான 51 என்ற எண்ணிக்கைக்கு நெருக்கமாக வந்துள்ளது.
இதையடுத்து, அடுத்த மேயர் யார் என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது. சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் மேயர் பதவியை கைப்பற்றும் முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்த நிலையில், திருவனந்தபுரம் மேயர் பதவிக்கான முதன்மை பெயராக பாஜக மாநில செயலாளரும், முன்னாள் யுவமோர்ச்சா மாநில தலைவருமான வி.வி. ராஜேஷ் பெயர் முன்வந்து உள்ளது.
கட்சியின் மாநில தலைமையும் ராஜேஷ் பெயருக்கு சாதகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவமோர்ச்சா தலைவராக இருந்த காலத்தில் மாநில அளவில் கவனம் ஈர்த்த ராஜேஷ், ஊடக விவாதங்களிலும் பாஜகவின் முக்கிய முகமாக செயல்பட்டவர். முன்னதாக பூஜப்புரா வார்டில் வெற்றி பெற்ற ராஜேஷ், இந்த முறை கொடுங்கனூர் வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.
மாநகராட்சியில் பல்வேறு பிரச்சினைகளில் பாஜகவை முன்னணியில் இருந்து வழிநடத்திய அனுபவம், மேலும் மாவட்ட தலைவர் என்ற நிர்வாக அனுபவம், மேயர் பதவிக்கு அவரை பொருத்தமானவராக மாற்றியுள்ளார் என கட்சி தலைமை கருதுகிறது. மேயர் பதவிக்கான இன்னொரு முக்கிய பெயராக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர். ஸ்ரீலேகா பேசப்படுகிறார்.
சாஸ்தமங்கலம் வார்டில் 1774 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள ஸ்ரீலேகா, தேர்தலுக்கு முன்பே மேயர் வேட்பாளராக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டவர். அவரது நேர்மையும் நிர்வாக அனுபவமும் பாஜகவிற்கு பலமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இந்த முறை துணை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே ஸ்ரீலேகா மேயராக நியமிக்கப்பட்டால், மேயர் மற்றும் துணை மேயர் இருவரும் பெண்களாக இருப்பார்கள். இதை கருத்தில் கொண்டு, ராஜேஷை மேயராகவும், ஸ்ரீலேகாவை துணை மேயராகவும் நியமிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறுகிறார்கள்.


