Drones in India: இந்தியாவில் 29,500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, டெல்லியில் அதிகபட்சமாக 4,882 ட்ரோன்கள் உள்ளன. தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா முறையே 4,588 மற்றும் 4,132 ட்ரோன்களுடன் அடுத்த இடத்தில் உள்ளன. 96 வகையான ட்ரோன் மாதிரிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் 29,500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, தேசிய தலைநகரான டெல்லியில் அதிகபட்சமாக 4,882 ட்ரோன்கள் உள்ளன. அடுத்த இடங்களில் தமிழ்நாடு (4,588) மற்றும் மகாராஷ்டிரா (4,132) ஆகியவை உள்ளன.

ஜனவரி 29ஆம் தேதி வரை புதுப்பிக்கப்பட்ட சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) தரவுகளின்படி, 29,501 பதிவு செய்யப்பட்ட ட்ரோன்கள் உள்ளன. இந்த வாரம் மாநிலங்களவையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, அதிக எண்ணிக்கையிலான பதிவுசெய்யப்பட்ட ட்ரோன்களைக் கொண்ட பிற மாநிலங்களில் ஹரியானா (3,689), கர்நாடகா (2,516), தெலுங்கானா (1,928), குஜராத் (1,338) மற்றும் கேரளா (1,318) ஆகியவை அடங்கும்.

இதுவரை, ஒழுங்குமுறை ஆணையம் வெவ்வேறு ஆளில்லா விமான அமைப்பு (UAS) மாதிரிகள் அல்லது ட்ரோன்களுக்கு 96 வகை சான்றிதழ்களை வழங்கியுள்ளது, அவற்றில் 65 மாதிரிகள் விவசாய பயன்பாட்டுக்கானவை.

பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு ட்ரோனுக்கும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் இயக்கப்படும் டிஜிட்டல் ஸ்கை பிளாட்ஃபார்மிலிருந்து ஒரு தனித்துவமான அடையாள எண் (UIN) வழங்கப்படுகிறது. DGCA அங்கீகாரம் பெற்ற தொலைதூர பைலட் பயிற்சி நிறுவனங்கள் (RPTOs) 22,466 தொலைதூர பைலட் சான்றிதழ்களை (RPCs) வழங்கியுள்ளன.

டிரோன் பதிவு குறித்த எழுத்துபூர்வமான பதிலை பகிர்ந்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல், பல்வேறு துறைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறினார். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ட்ரோன்களுக்கான விதிமுறைகளும் திருத்தப்பட்டன. இதன் மூலம் ட்ரோனைப் பதிவு செய்தல் மற்றும் பதிவை நீக்குதலுக்கு பாஸ்போர்ட் தேவை என்ற நிபந்தனை ரத்து செய்யப்பட்டது.

புதிய விதிகளின்படி, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ட்ரோன் பதிவு செய்யவோ அல்லது பதிவை நீக்கவோ முடியும். ட்ரோன்களுக்கு வான்வெளி வரைபடம் ஒன்று உள்ளது. அது பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பச்சை மண்டலத்தில் ட்ரோன்களை இயக்குவதற்கு முன் அனுமதி தேவையில்லை, அதே நேரத்தில் மஞ்சள் மண்டலத்தில் ட்ரோன்களின் இயக்க சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) அறையின் ஒப்புதல் வேண்டும். சிவப்பு மண்டலத்தில் ட்ரோன்களை பறக்கவிட, மத்திய அரசின் அனுமதி தேவை.