உத்தரப் பிரதேசம் கான்பூரில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்ணிடம் முத்தமிட முயன்ற நபரின் நாக்கை அப்பெண் கடித்துத் துப்பியுள்ளார். நீண்ட நாட்களாக அந்தப் பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்து வந்த அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரின் நாக்கை அந்தப் பெண் கடித்துத் துப்பியுள்ளார்.

நாக்கு துண்டாகி, பலத்த காயமடைந்த அந்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயலில் நடந்த சம்பவம்

இச்சம்பவம் திங்கள்கிழமை அன்று நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான சம்பி என்பவர் அவரிடம் அத்துமீறிச் சென்றுள்ளார்.

சம்பி, அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பிடித்து, அவரது எதிர்ப்பையும் மீறி முத்தமிட முயன்றுள்ளார்.

எதிர்த்துப் போராடிய அந்தப் பெண், சம்பியின் நாக்கை கடித்துத் துப்பிவிட்டார். வாயில் ரத்தம் சொட்ட வலியால் துடித்த சம்பி வயலிலேயே கீழே விழுந்தார்.

நீண்ட நாள் தொந்தரவு

போலீஸ் விசாரணையில், சம்பி நீண்ட நாட்களாக அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும், பலமுறை எச்சரித்தும் அவர் தனது நடத்தையை மாற்றிக்கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

காயமடைந்து விழுந்து கிடந்த சம்பியை போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நாக்கில் ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக, அவர் மேல் சிகிச்சைக்காக கான்பூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். காயமடைந்தவர் குணமடைந்தவுடன் அவர் கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். குற்றவாளியை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.