உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்ய காந்த், இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் நவம்பர் 24, 2025 அன்று பதவியேற்பார். சட்டப்பிரிவு 370 உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பளித்த அமர்வில் அங்கம் வகித்துள்ளார்
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி சூர்ய காந்த், இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் நவம்பர் 24ஆம் தேதி பதவியேற்பார் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
தற்போதைய தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் அவர்களின் பதவிக் காலம் நவம்பர் 23 அன்று முடிவடையும் நிலையில், நீதிபதி சூர்ய காந்த் அவர்கள் நவம்பர் 24 முதல் பொறுப்பேற்பார்.
ஜனாதிபதி அறிவிப்பு
இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த நியமனத்தை அளித்துள்ளார். இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் நீதித் துறை, அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பதிவில், "இந்திய அரசியலமைப்பின் அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. சூர்ய காந்த் அவர்களை நவம்பர் 24, 2025 முதல் இந்தியத் தலைமை நீதிபதியாக நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி அடைகிறார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி சூர்யகாந்த் யார்?
நீதிபதி சூர்ய காந்த் அவர்கள் சுமார் 15 மாதங்கள் தலைமை நீதிபதியாகப் பணியாற்றுவார். இவர் 65 வயதை நிறைவு செய்வதையொட்டி, பிப்ரவரி 9, 2027 அன்று ஓய்வு பெறுவார்.
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிப்ரவரி 10, 1962 அன்று பிறந்த நீதிபதி காந்த், மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார். அவர் நீதித்துறையில் இருபதாண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவரது தீர்ப்புகள் அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம், பாலின சமத்துவம், ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற முக்கிய விவகாரங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவை.
முக்கிய வழக்குகளும் தீர்ப்புகளும்
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்த அமர்வில் இவர் அங்கம் வகித்தார்.
காலனித்துவ காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோகச் சட்டத்தை நிறுத்திவைத்த அமர்விலும் நீதிபதி சூர்யகாந்த் அங்கம் வகித்தார். இந்தச் சட்டத்தை அரசு மறுஆய்வு செய்யும் வரை இந்தச் சட்டத்தின் கீழ் புதிய முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்படக் கூடாது என்று தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது.
பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 இலட்சம் பேரின் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி, தேர்தலில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்தார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட வழக்கறிர்கள் சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 2022 பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்த அமர்வில் இவர் இருந்தார். இத்தகைய விவகாரங்களுக்கு "நீதித்துறை பயிற்சி பெற்ற மனம்" தேவை என்று வலியுறுத்தினார்.
ராணுவப் வீரர்ளுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டம் அரசியலமைப்பு ரீதியாகச் செல்லும் என்று உறுதி செய்த தீர்ப்பு இவர் வழங்கியதுதான்.
பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான வழக்கை விசாரித்த அமர்வில் இருந்த நீதிபதி சூர்யகாந்த், "தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் அரசுக்குச் சலுகை அளிக்க முடியாது" என்று கூறினார். சட்டவிரோதக் கண்காணிப்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சைபர் நிபுணர்கள் குழுவை நியமித்தார்.


