உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள் குறித்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். நீதிமன்றங்கள் ஜனாதிபதியை வழிநடத்தும் சூழ்நிலை இருக்கக்கூடாது என்றும், உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரத்திற்குப் பிறகு இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
Judges Acting As Super-Parliament VP Dhankhar remark: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் குறித்து கடுமையான கருத்துக்களை இன்று வெளியிட்டுள்ளார். நீதிமன்றங்கள் ஜனாதிபதியை வழிநடத்தும் ஒரு சூழ்நிலை இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல நடந்து கொள்கிறது என்று கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பத்து மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்:
உச்ச நீதிமன்றம், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடுவை நிர்ணயித்த சில நாட்களுக்குப் பிறகு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பத்து மசோத்தாக்களை ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து உச்சநீதிமன்றத்துக்கு தமிழ்நாடு அரசு சென்றது. வழக்கு விசாரணைக்குப் பின்னர், உச்சநீதிமன்றமே இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. இது தனது அரசுக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று ராஜ்யசபா பயிற்சியாளர்களின் 6வது தொடரில் உரையாற்றிய தன்கர், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் இருந்து பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விரிவாகப் பேசினார். சர்ச்சைக்கு நீதித்துறையின் பதிலை கடுமையாக சாடினார்.
"மார்ச் 14 மற்றும் 15 ஆம் தேதி இரவு புதுதில்லியில் ஒரு நீதிபதியின் இல்லத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. இதுபற்றி ஏழு நாட்களுக்கு யாருக்கும் தெரியாது. நம்மை நாமே கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். தாமதம் விளக்கத்தக்கதா? மன்னிக்கத்தக்கதா? இது சில அடிப்படை கேள்விகளை எழுப்பவில்லையா? நாட்டு மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தனர் என்று மார்ச் 21 ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டு இருந்தது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
நாடு பதற்றத்தில் உள்ளது: துணை ஜனாதிபதி தன்கர்:
மேலும் தன்கர் தனது பேச்சியில், "அதன்பிறகு, அதிர்ஷ்டவசமாக, பொது களத்தில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரத்திடமிருந்து எங்களுக்குத் தகவல்கள் கிடைத்தன. அதில் இருக்கும் தகவல்கள் குற்றத்தை எங்களுக்கு சுட்டிக்காட்டியது. ஏதோ தவறு நடந்ததாக சந்தேகிக்க வழிவகுக்கவில்லை. ஏதாவது விசாரிக்கப்பட வேண்டும். இப்போது நாடு மூச்சுத் திணறலுடன் இருக்கிறது. மக்கள் எப்போதும் மிகுந்த மரியாதையுடனும் ஒரு அமைப்பை கூண்டில் நிறுத்தப்பட்டதால் நாடு பதற்றமடைந்துள்ளது.
எஃப்ஐஆர் ஏன் பதிவு செய்யவில்லை: தன்கர்:
நீதிபதி வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புத் துறை நடவடிக்கையின் போது பணம் மீட்கப்பட்ட பிறகும் அவருக்கு எதிராக எந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. மேலும் நாட்டில் உள்ள யார் மீது வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம், ஆனால் ஒரு நீதிபதி மீது வழக்குத் தொடர வேண்டுமானால் சிறப்பு அனுமதி தேவைப்படுகிறது.
நீதிபதி மீது எஃப்ஐஆர் பதிய நீதிமன்றம் அனுமதி வேண்டும்: தன்கர்
"இந்த நாட்டில் ஒரு எஃப்.ஐ.ஆர் யாருக்கும் எதிராகவும், எந்தவொரு அரசியலமைப்புச் சட்ட அதிகாரிக்கும் எதிராகவும் பதிவு செய்யலாம். ஒருவர் சட்டத்தை செயல்படுத்த வேண்டும். எந்த அனுமதியும் தேவையில்லை. ஆனால் அவர்கள் நீதிபதிகளாக இருந்தால், எஃப்.ஐ.ஆரை உடனடியாக பதிவு செய்ய முடியாது. அது நீதித்துறையில் சம்பந்தப்பட்டவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும், ஆனால் அப்படி ஒன்றும் அரசியலமைப்பில் கூறப்படவில்லை.
ஜனாதிபதிக்கே உத்தரவு பிறப்பிப்பார்களா?
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. நீதிபதிகள் சூப்பர்-நாடாளுமன்றமாக செயல்படுவார்களா? சமீபத்திய தீர்ப்பின் மூலம் நாம் எங்கே போகிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? யாராவது மறுஆய்வு மனு தாக்கல் செய்கிறார்களா இல்லையா என்பது முக்கியம் இல்லை. தற்போது நாங்கள் ஜனநாயகத்திற்காக ஒருபோதும் பேரம் பேசவில்லை. ஜனாதிபதி ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிவெடுக்க வேண்டும், இல்லை என்றால் அது சட்டமாகிவிடும் என்று கூறுகின்றனர். அரசியலமைப்பின் 142வது பிரிவு நீதித்துறையின் "ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையாக" மாறிவிட்டது'' என்று துணை ஜனாதிபதி தன்கர் குறிப்பிட்டுள்ளார்.
