ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடியில், பாலியல் அத்துமீறலை எதிர்த்த துரித உணவு கடைக்காரர் மீது இளைஞர்கள் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினர். இதில் பலத்த தீக்காயமடைந்த பெண், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில், பாலியல் அத்துமீறலை எதிர்த்துப் போராடிய பெண் ஒருவரின் மீது இரண்டு இளைஞர்கள் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிடி மாவட்டம், லேடா பஞ்சாயத்துக்கு உட்பட்ட காடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்தப் பகுதியில் சிறிய துரித உணவு (Fast Food) கடை நடத்தி வருகிறார். இவருடைய கணவர் மாற்றுத்திறனாளி.
கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கும்பல்
ஞாயிற்றுக்கிழமை மாலை, இவரது கடைக்கு வந்த ஒரு கும்பல் அந்தப் பெண்ணிடம் ஆபாசமான சைகைகளை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது. இதனை அந்தப் பெண் கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த இளைஞர்களில் ஒருவர் சமோசா பொரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து அந்தப் பெண்ணின் மீது ஊற்றினார். இதில் அவரது கை மற்றும் கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சர்தார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் கவலைக்கிடம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய உதய் சௌத்ரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான மனிஷ் சௌத்ரி என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கை மிகவும் தீவிரமாக அணுகி வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.


