பாகிஸ்தானின் தொடர் பயங்கரவாதச் செயல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு அளிப்பதை இந்தியா அம்பலப்படுத்தியுள்ள நிலையில், எல்லை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இனி பாகிஸ்தான் நடத்தும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் இந்தியாவிற்கு எதிரான போராகக் கருதப்படும் என்றும், அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா முடிவு செய்துள்ளது என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டு நாட்களாக பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து இந்தியா இந்த முடிவுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கும் தங்கள் ராணுவத்துக்கும் தொடர்பில்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், பயங்கரவாதிகளுக்கு பயற்சி அளித்தும் ஆயுதங்களை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது.
இந்தியாவின் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பகிரங்கமாகக் கலந்துகொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகள் இதனை உறுதிபடுத்தின.
வெளியுறவுத்துறை எச்சரிக்கை:
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகள் நிலைமையை மோசமடையச் செய்யும், ஆத்திரமூட்டும் செயல் என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு இந்தியா பொறுப்பான முறையிலும் மற்றும் துல்லியமாகவும் எதிர்வினையாற்றியுள்ளது எனவும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்கு எல்லைகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்தார். வியாழக்கிழமை இரவு, இந்திய ராணுவ தளங்களைத் தாக்க பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.


