பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஆகாஷ் (Akash-NG) ஏவுகணையின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்த ஏவுகணை வான்வழி அச்சுறுத்தல்களைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, அடுத்த தலைமுறை ஆகாஷ் (Akash-NG) ஏவுகணையின் பயனர் மதிப்பீட்டுச் சோதனைகள் (User Evaluation Trials - UET) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இது இந்திய விமானப் படையின் தற்காப்புத் திறனைப் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதனைப் படைத்த சோதனைகள்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகள் குறித்த வீடியோவை பாதுகாப்பு அமைச்சகம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த ஏவுகணை பல்வேறு வகையான வான்வழி அச்சுறுத்தல்களை மிகத் துல்லியமாக இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது. சோதனையின் போது, மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும் இலக்குகள் முதல், அதிக உயரத்தில் வெகு தொலைவில் உள்ள இலக்குகள் வரை அனைத்தையும் இந்த ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது.
இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடியோ அலைவரிசை சீக்கர் (RF Seeker), இரண்டு நிலைகளில் செயல்படும் திட ராக்ஜெட் மோட்டார் (Dual-pulse solid rocket motor) மற்றும் ரேடார் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணை அமைப்பின் அனைத்து உதிரிபாகங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) இந்தியத் தொழில்துறையினரின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தலைவர்களின் பாராட்டு
இந்த வெற்றிகரமான சோதனை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஏவுகணை அமைப்பு, இந்திய விமானப் படையின் வான் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும்," என்று அவர் பாராட்டியுள்ளார்.
சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து, ஆகாஷ்-என்ஜி (Akash-NG) ஏவுகணைகள் விரைவில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளன. இது நாட்டின் வான் எல்லைப் பாதுகாப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என DRDO தெரிவித்துள்ளது.


