மும்பையில் வசிக்கும் 73 வயது மூதாட்டியிடம் டிராய் அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதி என கூறிக்கொண்டு சைபர் குற்றவாளிகள் ரூ. 2.89 கோடி மோசடி செய்துள்ளனர். சைபர் போலீசார் துரித நடவடிக்கை எடுத்து ரூ. 1.29 கோடியை மீட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் வில்லே பார்லே பகுதியில் வசிக்கும் 73 வயது மூதாட்டி ஒருவரிடம், டிராய் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதி என கூறிக்கொண்டு சைபர் குற்றவாளிகள் ரூ. 2.89 கோடி மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடியில் சிக்கிய மூதாட்டியின் புகாரின் பேரில், சைபர் போலீசார் துரித நடவடிக்கை எடுத்து ரூ. 1.29 கோடியை மீட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைக்கு இடைப்பட்ட நாட்களில் இந்த மோசடி அரங்கேறியுள்ளது. மர்ம நபர்கள் வாட்ஸ்அப் வழியாக தொலைபேசியில் மூதாட்டியைத் தொடர்புகொண்டுள்ளனர்.
மோசடி நடந்தது எப்படி?
முதலில், தன்னை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவர், அந்தப் பெண் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக அச்சுறுத்தியுள்ளார். உடனடியாக, மற்றொரு நபர் தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு, ஒரு மோசடி வழக்கில் சிக்கிய தொழிலதிபருடன் மூதாட்டிக்குத் தொடர்பு இருப்பதாக மிரட்டியுள்ளார். இதனால், மூதாட்டி 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, அவரை கைது செய்வதிலிருந்து காப்பாற்ற ஒரு நீதிபதி உதவுவார் என்று வீடியோ அழைப்பில் அந்த நபர் தெரிவித்துள்ளார். இந்த தந்திரமான பேச்சின் மூலம், மூதாட்டியிடம் இருந்து ரூ. 2.89 கோடியை பல்வேறு கட்டங்களாக பணப் பரிமாற்றம் செய்ய வைத்துள்ளனர்.
ரூ.1.29 கோடி மீட்பு:
மோசடியில் சிக்கியதை உணர்ந்த மூதாட்டி, உடனடியாக சைபர் போலீசாரைத் தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சைபர் போலீசார், விரைந்து செயல்பட்டு ரூ. 2.89 கோடியில் ரூ. 1.29 கோடியை மீட்டுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற தொலைபேசி மற்றும் ஆன்லைன் மிரட்டல்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


