பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், என்டிஏ கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பாஜக மற்றும் ஜேடியு தலா 101 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. சிராக் பாஸ்வான் கட்சிக்கு 29, மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் (BJP), ஐக்கிய ஜனதா தளமும் (JD(U)) சம எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளன.

கூட்டணி தலைமை அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தொகுதிப் பங்கீட்டு விவரங்களை பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே சமூக வலைதளமான எக்ஸில் (X) பகிர்ந்துள்ளார்.

பாஜக - ஜே.டி.யூ.வுக்கு சம பங்கு

இந்த முறை மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியக் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) ஆகியவை தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன.

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 தொகுதிகளில் களமிறங்குகிறது. மேலும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (RLM) மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) ஆகிய கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது குறித்துப் பேசிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். பீகாரில் மீண்டும் என்.டி.ஏ. அரசாங்கத்தை அமைக்கும் உறுதியுடன் அனைத்துத் தோழர்களும் தங்கள் பணியைத் தொடங்கிவிட்டனர்" என்று தெரிவித்தார்.

தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலானது நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்று் இடதுசாரி கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளும் டெல்லியில் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றன. விரைவில் அவர்களும் தொகுதி பங்கீட்டை இறுதிசெய்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.