பீகார் தேர்தலில் மதுபன் தொகுதியில் சீட் மறுக்கப்பட்டதால், ஆர்ஜேடி நிர்வாகி மதன் ஷா, லாலு பிரசாத் யாதவ் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.70 கோடி பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆர்ஜேடி (RJD) கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, சீட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த கட்சி நிர்வாகி ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுபன் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட மதன் சா என்பவர் ஆவேசமாக தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதன் ஷாவின் குற்றச்சாட்டு
மதன் ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் நீண்ட காலமாக கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். கடந்த 2020 தேர்தலில் மதுபன் தொகுதியில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளரிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். இந்த முறை எனக்கு சீட் கிடைக்கும் என்று நம்பினேன்.
சீட் வாங்கித் தருவதாகச் சொன்னவரிடம் ரூ.2.70 கோடி கொடுத்தேன். என் பிள்ளைகளின் திருமணத்தைக்கூட நிறுத்தி வைத்து அந்தப் பணத்தை நான் திரட்டினேன். இப்போது நான் மொத்தமாக ஏமாற்றப்பட்டிருக்கிறேன். குறைந்தபட்சம் அவர்கள் என்னிடம் வாங்கிய பணத்தையாவது திருப்பித் தர வேண்டும்," என்று கண்ணீருடன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
கட்சியின் மௌனம்
வேட்பாளரிடம் பணம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது குறித்து ஆர்ஜேடி கட்சித் தலைவர்கள் மௌனம் காக்கின்றனர்.
வேட்புமனு தாக்கல் நாளை (அக்டோபர் 20) முடிவடைய உள்ள நிலையில், மதுபன் தொகுதியில் ஆர்ஜேடி மீண்டும் போட்டியிடுமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சீட் மறுக்கப்பட்டதோடு, பணம் பறிக்கப்பட்டதாக முன்னாள் வேட்பாளர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருப்பது பீகார் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


