தீபாவளியின்போது போபாலில் ஆபத்தான கால்சியம் கார்பைடு குழாய் துப்பாக்கிகள் வெடித்ததில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் பல குழந்தைகள் கடுமையான கண் பாதிப்புகளுக்கு உள்ளாகி, சிலர் பார்வையை இழந்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகையின்போது பயன்படுத்தப்பட்ட ஆபத்தான கால்சியம் கார்பைடு குழாய் துப்பாக்கிகள் (Calcium Carbide Pipe Guns) வெடித்ததில், 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் 8 முதல் 14 வயதுக்குபட்டவர்கள்.
தீபாவளிக்கு மறுநாள் போபால் முழுவதும் கார்பைடு துப்பாக்கிகள் தொடர்பான 150-க்கும் மேற்பட்ட காயம் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் சேவா சதன் மருத்துவமனையிலும், மற்றவர்கள் ஹமீடியா மருத்துவமனை, ஜே.பி. மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போபாலின் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி (CMHO) மணீஷ் ஷர்மா இதுகுறித்து பேசுகையில், "கார்பைடு குழாய் துப்பாக்கிகள் மிகவும் ஆபத்தானவை. இந்தத் துப்பாக்கிகளைப் பயன்படுத்திக் காயமடைந்த 60 பேர் போபாலின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்," என்று கூறினார்.
பலருக்கு கண் பார்வை பாதிப்பு
பெரும்பாலானோருக்கு உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், பல நோயாளிகள் கடுமையான கண் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சிலர் தங்கள் கண் பார்வையை இழந்துள்ளனர் என்றும், மேலும் சிலர் முகத்தில் தீக்காயங்கள் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, பார்வையை மீட்டெடுக்க அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. ஹமீடியா மருத்துவமனையில் சுமார் 10 குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கார்பைடு துப்பாக்கி செயல்படுவது எப்படி?
கேஸ் லைட்டர், பிளாஸ்டிக் குழாய் மற்றும் கால்சியம் கார்பைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி தற்காலிகமாக இந்தத் துப்பாக்கி தயாரிக்கப்படுகிறது. கால்சியம் கார்பைடுடன் தண்ணீர் சேரும்போது அசிட்டிலீன் (Acetylene) வாயு வெளியிடப்படுகிறது. இந்த வாயு தீப்பொறியுடன் தொடர்பு கொள்ளும்போது பலமாக வெடிக்கிறது. வெடிப்பின்போது பிளாஸ்டிக் துண்டுகள் சிதறுவதோடு, தீக்காயத்தையும் ஏற்படுத்துவதால், முகம் மற்றும் கண்களில் கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன.
கண் பார்வை இழப்பிற்கு காரணம் என்ன?
டாக்டர் கவிதா குமார் இதுகுறித்து விளக்குகையில், "கார்பைடு துப்பாக்கியில் வெடிப்பு நிகழும்போது சிதறும் தீப்பொறி கண்ணுக்குள் நுழைந்து, கண்ணில் தீக்காயங்களை உண்டாக்கும். இதனால்தான் கண் பார்வையையே இழக்க நேரிடுகிறது," என்கிறார்.
போபால் மருத்துவமனை ஒன்றின் கண் மருத்துவர் அதிதி துபே கூறுகையில், “பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 20 முதல் 30 சதவீதம் நோயாளிகள் கடுமையாகக் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவை. லேசான தீக்காயம் உள்ளவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்," என்றார்.
சிலருக்கு கார்னியா மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சிலருக்கு நிரந்தரமாகப் பார்வை இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என்கிறார்கள்.
தடை விதிக்க பெற்றோர்கள் கோரிக்கை
போபால் அரசு அதிகாரிகள் கார்பைடு துப்பாக்கிகள் விற்பனையைத் தடுக்கத் தவறிவிட்டதாக காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்தினர் குறை கூறுகின்றனர். இந்தத் துப்பாக்கிகளின் தயாரிப்புக்கு தடை விதிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


